பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கி கடனுதவி வழங்க பரிந்துரை


பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கி கடனுதவி வழங்க பரிந்துரை
x
தினத்தந்தி 15 Feb 2017 4:00 AM IST (Updated: 15 Feb 2017 3:01 AM IST)
t-max-icont-min-icon

பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் கடனுதவி வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தேர்வுக்குழு கூட்டம்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட தொழில் மையம், கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் புதிதாக தொழில் தொடங்குபவர்களை தேர்வு செய்வதற்கான நேர்முக தேர்வுக்குழு கூட்டம் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

நேர்முகத்தேர்வு குழு பரிசீலனையின் அடிப்படையில் புதிதாக தொழில் தொடங்குவோருக்கு மொத்தம் ரூ.47.52 லட்சம் மதிப்பிலான மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுதவி வழங்க பல்வேறு வங்கிகளுக்கு பரிந்துரை ஆணை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நடராஜன் பேசியதாவது:– படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை புதிதாக தொழில் தொடங்க ஊக்குவித்திடும் வகையில் மாவட்ட தொழில்மையம், கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியம் மற்றும் கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் ஆகியவற்றின் மூலம் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் புதிய தொழில் முனைவோருக்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் புதிய தொழில் தொடங்குவோரை தேர்வு செய்வதற்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டுள்ள புதிய தொழில் முனைவோரின் கல்வித்தகுதி, தொழில்களின் சாத்தியக்கூறுகள், சந்தை வாய்ப்பு மற்றும் மேலாண்மை குறித்து நேர்காணல் செய்து மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையின் அடிப்படையில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் ரூ.29.47 லட்சம் மதிப்பில் மத்திய அரசு மானியத்துடன் கூடிய ரூ.90.44 லட்சம் மதிப்பிலும், கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியம் சார்பில் வங்கி கடனாக ரூ. 18.05 லட்சம் மத்திய அரசு மானியத்துடன் கூடிய ரூ.53.85 லட்சம் மதிப்பிலும் வங்கிக்கடனுதவி வழங்க பல்வேறு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பயிற்சி

தேர்வு செய்யப்பட்ட தொழில் முனைவோர்கள் சம்பந்தப்பட்ட வங்கியில் தற்காலிக ஒப்பளிப்பு பெற்றவுடன், தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு உரிய சான்றிதழ் பெற்ற பின் வங்கிக்கடன் பட்டுவாடா செய்யப்பட்டு பின்னர் அரசு மானியம் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும். எனவே புதிதாக தொழில் தொடங்க விருப்பமுள்ள தகுதியான இளைஞர்கள் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த தேர்வு குழுவில் குழுவில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் சதீஷ்குமார், கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரிய உதவி இயக்குனர் பாரதி, கதர் கிராம தொழில்கள் ஆணைய அலுவலர் பிரபாகரன், தாட்கோ மேலாளர் செல்வராஐ, கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் சியாமளநாதன், புதுவாழ்வு உதவி திட்ட அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story