பி.ஆர்.பி. சொத்துக்களை ஏலம் விட அனுமதி கோரிய வழக்கு: அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
இந்தியன் வங்கியின் மதுரை பிரதான கிளை உதவி பொது மேலாளர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தின் மேலாண்மை பங்குதாரர் பி.ஆர்.பழனிச்சாமி, எங்களது வங்கி கிளையில் கடந்த 2013–ம் ஆண்டு முதல் மொத்தம் ரூ.135 கோடி கடன் பாக்கி வைத்த
மதுரை,
இந்தியன் வங்கியின் மதுரை பிரதான கிளை உதவி பொது மேலாளர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தின் மேலாண்மை பங்குதாரர் பி.ஆர்.பழனிச்சாமி, எங்களது வங்கி கிளையில் கடந்த 2013–ம் ஆண்டு முதல் மொத்தம் ரூ.135 கோடி கடன் பாக்கி வைத்துள்ளார். இந்த கடனுக்காக கிரானைட் பாலிஷ் தொழிற்சாலை மற்றும் அங்கு உள்ள பொருட்களை அடமானமாக வைத்திருக்கிறார். இந்தக் கடனை திரும்ப செலுத்த வில்லை. எனவே கோர்ட்டு தலையிட்டு எங்களது வங்கிக் கடனை ஈடு செய்ய தெற்குத் தெருவில் உள்ள பி.ஆர்.பி. கிரானைட் தொழிற்சாலையின் சொத்துக்களை பொது ஏலத்தில் விட அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவின்பேரில் அமலாக்கத்துறையும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டது. அதன்பேரில் பி.ஆர்.பி. சொத்துக்களை ஏலம் விடுவது குறித்த காரணம் கேட்பு நோட்டீசு அமலாக்கத்துறை சார்பில், இந்தியன் வங்கிக்கு அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த வங்கி சார்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஜே.நிஷாபானு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீஸ் அடிப்படையில் இந்தியன் வங்கி உதவி பொதுமேலாளர் நேரில் ஆஜராக தடை விதிக்க வேண்டும் என்று வங்கி தரப்பில் கோரப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இதுகுறித்து அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை வருகிற 17–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.