சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு: ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்


சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு: ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்
x
தினத்தந்தி 15 Feb 2017 4:00 AM IST (Updated: 15 Feb 2017 3:02 AM IST)
t-max-icont-min-icon

சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து, கோவையில் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.

சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு

கோவையில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகமான இதய தெய்வம் மாளிகை முன்பு நேற்று காலை அ.தி.மு.க.வினர் திரண்டு இருந்தனர். இந்த நேரத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தண்டனையை உறுதி செய்து நேற்று தீர்ப்பு கூறியது. இதை கேட்டு சசிகலா ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அது குறித்து பதில் பேச மறுத்து விட்டனர். அங்கு வந்த பத்திரிகை புகைப்படக்காரர்களை படம் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.

பரபரப்பு

இந்த நிலையில் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சிலர் உற்சாகத்துடன் தீர்ப்பை வரவேற்று பேட்டி கொடுத்தனர். அவ்வாறு பேட்டி கொடுத்த நபர்களை இதயதெய்வம் மாளிகை வளாகத்துக்குள் இருந்து வெளியேறுமாறு சசிகலா ஆதரவாளர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருந்தபோதிலும் அவர்கள் பேட்டி அளிக்க தயங்கவில்லை.

பேட்டியின் போது அவர்கள், ஜெயலலிதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக அறிவிக்க வேண்டும். அவரது சொத்துக்களை கட்சிக்கு சொந்தமாக்க வேண்டும். அல்லது அரசுடைமையாக்க வேண்டும் என்று கூறினார்கள்.

பட்டாசு வெடித்தனர்

இதற்கிடையில் இதய தெய்வம் மாளிகை எதிரே வைக்கப்பட்டிருந்த சசிகலா பேனர்களை கிழிக்கவும், பட்டாசு வெடித்து கொண்டாடவும், ஒரு கோஷ்டியினர் வருவதாக தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் உஷார் அடைந்தனர். ஆனால் யாரும் வரவில்லை. இருந்தபோதிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். இந்த நிலையில் புலியகுளம் பகுதியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர்.


Next Story