எஸ்டேட் கிணற்றில் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு: தோட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
முட்டுக்காட்டில், எஸ்டேட் கிணற்றில் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து தோட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜாக்காடு அடுத்துள்ள முட்டுக்காடு பகுதியில் சுமார் 100–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக பஞ்சாயத்து நிர்வாகம் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீரை தேடி அலையும் நிலை ஏற்பட்டது.
முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்குள்ள தனியாருக்கு சொந்தமான எஸ்டேட்டில் உள்ள கிணற்றில் தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வந்தனர்.
சாலை மறியல்இந்தநிலையில் கிணற்றில் தண்ணீர் எடுத்தால் தங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போய்விடும் என்று தோட்டத்தில் தங்கியுள்ள தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வெளியாட்கள் தண்ணீர் எடுப்பதற்கு கண்டனம் தெரிவித்து முட்டுக்காடு– கஜானாபாறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராஜாக்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.