நிலத்தை அளந்து கொடுப்பதற்காக விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது
விருத்தாசலம் அருகே நிலத்தை அளந்து கொடுப்பதற்காக விவசாயியிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கோ.பவளங்குடியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் நாகராஜ் (வயது 28). விவசாயி. இவர் தன்னுடைய 50 சென்ட் வீட்டு மனையை அளந்து பட்டா வழங்குமாறு விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் மனு செய்திருந்தார். இந்த மனு ஊ.மங்கலம் சர்வேயரான விழுப்புரம் மாவட்டம் சேந்தநாட்டை சேர்ந்த மணிகண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மனுவை பெற்ற சர்வேயர் மணிகண்டன், நாகராஜிடம் உங்களுடைய வீட்டுமனையை அளந்து கொடுப்பதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று அவரிடம் கேட்டதாக தெரிகிறது. இதற்கு மறுத்த நாகராஜ் இது பற்றி கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
கைதுஅதைத்தொடர்ந்து போலீசாரின் ஆலோசனையின் பேரில் நேற்று ரசாயன பவுடர் தடவிய ரூ.2 ஆயிரத்துடன் சேந்தநாட்டில் உள்ள சர்வேயர் மணிகண்டன் வீட்டுக்கு நாகராஜ் சென்றார். பின்னர் அங்கிருந்த மணிகண்டனிடம், நாகராஜ் ரூ.2 ஆயிரத்தை கொடுத்தார்.
இதை மணிகண்டன் வாங்கிய போது, அங்கு பதுங்கி இருந்த கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், சதீஷ், திருவேங்கடம் மற்றும் போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சர்வேயர் மணிகண்டன் ஏற்கனவே கடலூர் மத்திய சிறையில் போலீஸ்காரராக பணியாற்றியவர். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று சர்வேயராக வேலை பார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.