கடலில் மீன்பிடித்த போது படகு கவிழ்ந்து மீனவர் பலி


கடலில் மீன்பிடித்த போது படகு கவிழ்ந்து மீனவர் பலி
x
தினத்தந்தி 15 Feb 2017 3:30 AM IST (Updated: 15 Feb 2017 3:03 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் துறைமுகம் அருகே கடலில் மீன்பிடித்த போது படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

படகு கவிழ்ந்தது

கடலூர் துறைமுகம் அருகே உள்ள ராசாப்பேட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி மகன் மாறன்(வயது 40), மீனவர். இவர் நேற்று காலை அதேபகுதியை சேர்ந்த அருள்(41), அருண்(24), பிரபு(33), ரஞ்சித்குமார்(30) ஆகியோருடன் ஒரு பைபர் படகில் மீன் பிடிப்பதற்காக ராசாப்பேட்டையில் உள்ள மீன்பிடி தளத்தில் இருந்து ஆழ்கடலுக்கு புறப்பட்டார்.

இவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, திடீரென ராட்சத அலை எழுந்தது. இதில் மாறன் சென்ற படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதையடுத்து படகில் இருந்த அனைவரும் நீந்தி கரைக்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் மாறனால் நீந்தி கரைக்கு திரும்ப முடியாமல், தண்ணீரில் மூழ்கினார். இதைப்பார்த்த அருள் உள்பட அனைவரும் சேர்ந்து மாறனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

சோகம்

பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாறனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து, மாறனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story