கூடலூர் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டமா?
கூடலூர் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதா? என்று நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கேரள மாநிலம் வயநாடு, மலப்புரம், கண்ணனூர், பாலக்காடு உள்ளிட்ட வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் முகாமிட்டு பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் மாவோயிஸ்டுகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்த தமிழக– கேரள அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். கேரள வனத்தின் கரையோரம் கூடலூர், பந்தலூர் தாலுகா உள்ளதால் தமிழக அதிரடிப்படை போலீசாரும் வனப்பகுதியில் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உத்தரவின் பேரில் கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசலு மேற்பார்வையில் கூடலூர் தாலுகா தேவர்சோலை செம்பக்கொல்லியில் இருந்து அடுப்பு குட்டி, வனகேம்ப், பூவத்திமேடு, ஈட்டி மரவளைவு, யானை பள்ளம், பனமர பள்ளம் உள்ளிட்ட வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதா? என்று தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் முருகேசன், தனிப்பிரிவு ஏட்டு பாபு, வன காப்பாளர் சித்தராஜ் உள்பட போலீசார், வனத்துறையினர் கூட்டு ரோந்து மேற்கொண்டனர்.
அடையாளம் தெரியாத நபர்கள்அப்போது வனப்பகுதியில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது தங்கி உள்ளார்களா? என பைனாகுலர் மூலம் போலீசார் கண்காணித்தனர். மேலும் ஆதிவாசி கிராமங்களுக்கு சென்று அப்பகுதி மக்களிடம் விசாரித்தனர். அடையாளம் தெரியாத நபர்கள் யாராவது வனப்பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தால் போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.
பின்னர் போலீசார், வனத்துறையினர் கேரள– கர்நாடகா மற்றும் தமிழக எல்லைகள் சந்திக்கும் பகுதி வரை சென்று கண்காணித்தனர். ஆனால் மனிதர்கள் நடமாட்டம் இல்லாததை போலீசார், வனத்துறையினர் உறுதி செய்தனர்.