சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை: ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோருக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தேனி,
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோருக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தேனியில் பேனருக்கு தீ வைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பட்டாசு வெடித்து உற்சாகம்முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவுக்கும் இடையே கடந்த சில நாட்களாக பனிப்போர் நிலவி வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது. இந்த சூழ்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு நேற்று அளிக்கப்பட்டது. இதில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து, ஏற்கனவே அவர்களுக்கு வழங்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்தது.
இந்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
மகளிர் அணியினர்தேனி நேரு சிலை சிக்னல் பகுதியில் அ.தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள் ராமுத்தாய், மாதவி, முனியம்மாள் மற்றும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணசாமி உள்பட ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் முதல்–அமைச்சராக நீடிக்க வேண்டும் என்றும், போயஸ் கார்டனில் இருந்து சசிகலா தரப்பினர் வெளியேற வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர்.
பெரியகுளம், ஆண்டிப்பட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், போடி ஆகிய இடங்களில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதேபோன்று, போடி அருகே சிலமலை மற்றும் உத்தமபாளையம் ஆகிய இரு இடங்களிலும் ஜெ.தீபா ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்தனர்.
பேனருக்கு தீ வைப்புஇதற்கிடையே தேனி பங்களாமேடு பகுதியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேனி நகர நிர்வாகியான சின்ஸ் என்பவர் பேனர் வைத்து இருந்தார். அந்த பேனரை நேற்று பிற்பகல் சிலர் கிழித்து, தீ வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பேனருக்கு தீ வைத்ததாக தேனி அல்லிநகரம் நகராட்சி 26–வது வார்டை சேர்ந்த அ.தி.மு.க. உறுப்பினர்களான பெருமாள், பாண்டி, அண்ணாத்துரை ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.