சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு: ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு: ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2017 4:15 AM IST (Updated: 15 Feb 2017 3:03 AM IST)
t-max-icont-min-icon

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

தர்மபுரி,

பட்டாசு வெடிப்பு

அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசலால் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் ஒரு அணியும் செயல்பட தொடங்கி உள்ளது. இந்த நிலையில் சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நேற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா உள்பட 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். தர்மபுரி நகரில் பஸ் நிலையம், ராஜகோபால் கவுண்டர் பூங்கா, 4 ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அரூர்- பென்னாகரம்

இதேபோல் அரூர் பஸ் நிலையத்தில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி தலைவர் காவேரி, முன்னாள் நகர செயலாளர் பழனிமுருகன் மற்றும் நிர்வாகிகள் ராஜா, அழகேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கினார். இதேபோல் பென்னாகரம் பஸ் நிலையத்தில்ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான பேரவை நிர்வாகி கணேசன், ஒன்றிய மாணவரணி செயலாளர் விஜயலிங்கம், இளைஞர் பாசறை மாவட்ட துணை செயலாளர் விஜயபாலாஜி ஆகியோர் தலைமையில் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

பாலக்கோடு

காரிமங்கலத்தில் ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதேபோன்று பாலக்கோடு, கம்பைநல்லூர், மொரப்பூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். 

Next Story