மணல் குவாரியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்


மணல் குவாரியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2017 4:00 AM IST (Updated: 15 Feb 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே மணல் குவாரியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

மணல் குவாரியால் பாதிப்பு

விழுப்புரம் அருகே கோவிந்தபுரம் தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் கடந்த சில மாதங்களாக அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டு வருவதாகவும், இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக லாரிகள் மற்றும் டிராக்டர்களில் மணல் எடுத்துச்செல்லப்படுவதாகவும், இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் கோவிந்தபுரம், கப்பூர், திருப்பச்சாவடிமேடு உள்ளிட்ட கிராமமக்கள் புகார் கூறினர்.

அதுமட்டுமின்றி கோவிந்தபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள விவசாய பயிர்களும் தண்ணீரின்றி கருகின. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். அதுமட்டுமின்றி மணல் ஏற்றிச்செல்லும் லாரிகளால் கிராம சாலைகள் குண்டும், குழியுமாக மாறிவிட்டது. எனவே இந்த குவாரியை மூட வேண்டும் என கோவிந்தபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

முற்றுகை

இந்த நிலையில் கோவிந்தபுரம், கப்பூர், திருப்பச்சாவடிமேடு ஆகிய 3 கிராம மக்கள் நேற்று காலை 9 மணியளவில் கோவிந்தபுரம் மணல் குவாரிக்கு திரண்டு சென்றனர். அங்கு அவர்கள், மணல் குவாரியை முற்றுகையிட்டனர். மேலும் மணல் ஏற்ற வந்த லாரிகளையும், மணல் அள்ளிக்கொண்டிருந்த பொக்லைன் எந்திரங்களையும் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர்கள் மருதப்பன், சத்தியசீலன், அண்ணாத்துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது போலீசார், மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story