வைகை ஆற்றில் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் சுகாதார சீர்கேடு
மானாமதுரை வைகை ஆற்றில் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மானாமதுரை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் இருந்து டன் கணக்கில் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. தினசரி காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் துப்புரவு பணியாளர்களை கொண்டு குப்பைகள் அள்ளப்படுகின்றன. ஒருசில வார்டுகளில் பெயரளவிற்கு குப்பைகள் அப்புறப்படுத்தப்படுகிறது. நகரில் சேரும் குப்பைகள், விஷேச தினங்களில் மேலும் அதிகமாகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை அழிப்பதற்காக மானாமதுரை சுடுகாடு அருகே அரசு செலவில் நவீன எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதனை பயன்படுத்த முடியாத காரணத்தால், ஊழியர்கள் ஒட்டுமொத்த குப்பைகளையும் சுடுகாடு பகுதியிலேயே கொட்டி, அவற்றை தீவைத்து விட்டு செல்கின்றனர். இதேபோல் மானாமதுரையில் சேகரிக்கப்படும் குப்பைகளை சிவகங்கை பைபாஸ் ரோடு சுடுகாடு மற்றும் அண்ணாசிலை பைபாஸ் ரோடு சுடுகாடு ஆகிய பகுதிகளிலும் கொட்டி தீயிட்டு அழித்து வந்தனர்.
சுகாதார சீர்கேடுதற்போது மதுரை–பரமக்குடி இடையே நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெறுவதால், அங்கு குப்பைகளை கொட்ட மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அதிகாரிகள் தடை விதித்து விட்டனர். இதனால் ஒட்டு மொத்த குப்பைகளையும், சிவகங்கை பைபாஸ் ரோடு சுடுகாடு அருகே வைகை ஆற்றினுள் கொட்டி தீயிட்டு கொளுத்துகின்றனர். குப்பைகளை கொட்டுவதற்கு சுடுகாடு அருகே 5 ஏக்கர் நிலம் சுற்றுச்சுவர் வசதியுடன் கட்டப்பட்டு தயாராக இருக்கும் நிலையில், பேரூராட்சி ஊழியர்கள் வைகை ஆற்றினுள் குப்பைகளை கொட்டி தீவைப்பதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
வலியுறுத்தல்மேலும் குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் கரும்புகை அடர்த்தியாக எழுந்து, தஞ்சாவூர்–மானாமதுரை சாலையை மறைக்கிறது. இதனால் அந்த வழியாக ராமேசுவரம் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பலரும் முகம் சுழித்து வருகின்றனர். எனவே மானாமதுரை பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை தரம்பிரித்து மறுசுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.