சாராய ஆலை தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்


சாராய ஆலை தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்
x
தினத்தந்தி 15 Feb 2017 3:15 AM IST (Updated: 15 Feb 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

சமாதான பேச்சுவார்த்தையை தொடர்ந்து சாராய ஆலை தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்

வில்லியனூர்

7–வது சம்பளக்கமி‌ஷன் பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி புதுவை அரசின் வடிசாராய ஆலை தொழிலாளர்கள் நேற்று காலை 2–வது நாளாக வேலை நிறுத்தத்தை தொடர்ந்தனர். அவர்களிடம் ஆலை சேர்மன் விஜயவேணி எம்.எல்.ஏ. நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து பிற்பகலில் அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினார்கள்.

வடிசாராய ஆலை

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே ஆரியபாளையம் கிராமத்தில் புதுச்சேரி அரசுக்கு சொந்தமான வடிசாராய ஆலை உள்ளது. இங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்கள், தங்களுக்கு 7–வது சம்பளக் கமி‌ஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து நேற்று முன்தினம் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு சாராய உற்பத்தியும், புதுவை மாநிலத்தில் சாராய கடைகளுக்கு விற்பனைக்காக சாராயம் அனுப்பப்படுவதும் பாதிக்கப்பட்டது.

தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை அறியாமல் வழக்கம்போல் விற்பனைக்காக சாராயப் பாட்டில்களை பெறுவதற்காக ஆலைக்கு வந்த வியாபாரிகள் அவற்றைபெறுவதில் சிரமம் எழுந்தது. அதனால் அவர்களாகவே சாராய பாட்டில்களை தங்கள் வாகனங்களில் ஏற்றி கடைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் தொழிலாளர்கள், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதனை தடுத்தனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து தொழிலாளர்களுடன், வடிசாராய ஆலை சேர்மன் விஜயவேணி எம்.எல்.ஏ. மற்றும் சாராய ஆலை நிர்வாக அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையின்போது, தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

ஆனாலும் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடமறுத்தனர். அதன் காரணமாக சாராய உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டது.

போராட்டம் வாபஸ்

இந்த நிலையில் சாராய ஆலை தொழிலாளர்கள் நேற்று காலை 2–வது நாளாக தங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர். அதனால் தொடர்ந்து அங்கு சாராய உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று பகல் 2 மணி அளவில் சாராய ஆலை சேர்மன் விஜயவேணி எம்.எல்.ஏ., தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பான கோப்புகளை முதல்–அமைச்சர் நாராயணசாமியிடம் அளித்துள்ளதாகவும், அதன்மீது இந்த வார இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என முதல்–அமைச்சர் உறுதி அளித்ததாகவும் தொழிலாளர்களிடம் விஜயவேணி எம்.எல்.ஏ. தெரிவித்தார். மேலும் போராட்டத்தை கைவிடும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதனை ஏற்று சாராய ஆலை தொழிலாளர்களை போராட்டத்தை கைவிட்டனர். பிற்பகல் 3 மணிக்கு மேல் அவர்கள் வழக்கமான வேலையில் ஈடுபட்டனர்.


Next Story