வடமாநில தொழிலாளி கழுத்தை அறுத்துக் கொலை
புதுவையில் வடமாநில தொழிலாளி கொலை கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார்.
புதுச்சேரி 100 அடி ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் புதுவை– அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலை பணி நடைபெற்று வரும் இடத்தில் ஜான்சிநகர் பகுதியில் டெண்ட் அமைத்து தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.
அங்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த்(வயது 50) என்பவரும் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு அவர்கள் தங்கி இருந்த பகுதியில் காலியா கிடந்த இடத்தில் ஸ்ரீகாந்த் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணைஇது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட ஸ்ரீகாந்த்துடன் வேலைபார்த்து வந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீகாந்த் எதற்காக கொலை செய்யப்பட்டார்? குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.