சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு: ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், தீபா பேரவையினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு: ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், தீபா பேரவையினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2017 4:30 AM IST (Updated: 15 Feb 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலாவுக்கு சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் தீபா பேரவையினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

சேலம்,

பட்டாசு வெடிப்பு


சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா உள்பட 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை தொடர்ந்து சேலம் மாவட்டம் ஆத்தூரில், முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஆத்தூர் பஸ் நிலையம் முன்பு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான நரசிங்கபுரம் நகரசபை முன்னாள் தலைவர் எம்.காட்டுராஜா, முன்னாள் கவுன்சிலர்கள் ராஜா, முரளி சாமி, குணசேகரன் மற்றும் என்ஜினீயர் கே.செல்வம், பழக்கடை முருகன், சதீஷ்குமார் உள்பட நிர்வாகிகள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். பின்னர் அவர்கள், ரவுண்டானா அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர்.

தலைவாசல்


இதேபோல் தலைவாசல் பஸ் நிலையம் அருகே ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றும் தீபா பேரவையினர் சேர்ந்து பொதுமக்களுக்குஇனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு மும்முடி அ.தி.மு.க. கிளைச் செயலாளர் ராஜேஸ்குமார் தலைமை தாங்கினார்.

இதில், அ.தி.மு.க. மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் ராணி மோகன்தாஸ், கெங்கவல்லி தொகுதி முன்னாள் செயலாளர் பாண்டியன், ஆரத்தி அகரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மும்முடியில் இருந்து தலைவாசல் பஸ் நிலையத்திற்கு அவர்கள் ஊர்வலமாக வந்தனர்.

ஓமலூர்


சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா உள்பட 3 பேருக்கு, சிறைத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்ததை அடுத்து, ஓமலூரில் தீபா பேரவையினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில் ஓமலூர் ஒன்றிய தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணி, குமார் உள்பட பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

இதேபோல், ஓமலூரை அடுத்த டேனிஸ்பேட்டையில் தி.மு.க. நிர்வாகிகள் சிவலிங்கம், ஈஸ்வரன் மற்றும் பலர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.


Next Story