காதலர்தின கொண்டாட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வாழ்த்து
புதுவையில் காதலர் தினத்தை காதலர்கள் கொண்டாடினார்கள். காதல்ஜோடிகளுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
காதலர் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காதல் ஜோடிகள் புதுவையில் உள்ள கடற்கரைசாலை, பூங்காக்கள் மற்றும் உணவு விடுதிகளில் கூடி காதலர் தினத்தை கொண்டாடினார்கள். அங்கு அவர்கள் தங்கள் ஜோடிகளுக்கு பரிசுகள் மற்றும் பூங்கொத்துகள் கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
புதுச்சேரியை பொறுத்தவரை காதலர் தின கொண்டாட்டம் என்பது பெரிய அளவில் நடைபெறவில்லை.
காதலர்கள் வழக்கமாக கூடும் தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா, கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில்கூட பகல் நேரத்தில் காதலர்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. இந்த நிலையில் பாரதி பூங்காவுக்கு வந்த காதலர்களை அழைத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பூக்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
போலீஸ் பாதுகாப்புபுதுவையில் உள்ள சுற்றுலாத் தலங்களான நோணாங்குப்பம் படகுகுழாம், ஊசுடு ஏரி பகுதிகளில் நேற்று அதிக அளவு காதலர்களை பார்க்க முடிந்தது. காதலர் தினத்தை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
காதலர் தினம் குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக துணைத்தலைவர் இளங்கோ கூறும்போது, ‘‘சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் ஏற்றத்தாழ்வுகளை வீழ்த்தி சமத்துவ சமுதாயம் படைத்திட சாதி, மதமறுப்பு திருமணங்களை கட்டாயமாக்க வேண்டும், சாதி மதமறுப்பு திருமணம் புரிந்தவர்களின் வாரிசுகளுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் தனி இடஒதுக்கீடு வழங்கவேண்டும்’’ என்று தெரிவித்தார்.