திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி விபத்து; அதிகாரிகள் அலட்சியம் என பயணிகள் புகார்


திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி விபத்து; அதிகாரிகள் அலட்சியம் என பயணிகள் புகார்
x
தினத்தந்தி 15 Feb 2017 3:15 AM IST (Updated: 15 Feb 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் விதிமீறலால் அடிக்கடி விபத்து; போக்குவரத்து பாதிப்பு அதிகாரிகள் அலட்சியம் என பயணிகள் புகார்

பவானிசாகர்,

திம்பம் மலைப்பாதையில் விதிமீறலால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. போலீசார் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பதே இதற்கு காரணம் என்று பயணிகள் புகார் தெரிவித்துள்ளார்கள்.

திம்பம் மலைப்பாதை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரியை அடுத்த திம்பம் மலைப்பாதை தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா செல்வதற்கு முக்கிய பாதையாக உள்ளது. பஸ், கார், இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி பாரம் ஏற்றிய லாரிகளும் திம்பம் மலைப்பாதையையே பயன்படுத்துகின்றன.

கடல் மட்டத்தில் இருந்து 1,105 மீட்டர் உயரத்தில் உள்ள திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில் அதிக பாரத்தை ஏற்றிக்கொண்டு சென்றால் வாகனங்களால் திரும்ப முடியாது. பழுது ஏற்பட்டு நின்றுவிடும்.

தொடர்கதை...

இதனால் பண்ணாரி சோதனை சாவடி அருகே போக்குவரத்து போலீசார் ஒரு அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அதாவது திம்பம் மலைப்பாதையை கடக்கும் வாகனங்கள் 16.20 டன் எடைக்குள்தான் பாரம் ஏற்றிவரவேண்டும். 3.80 மீட்டர் உயரத்துக்குள்தான் பாரம் அடுக்கி இருக்கவேண்டும். கொண்டை ஊசி வளைவுகளை கடக்கும்போது, 20 கிலோ மீட்டர் வேகத்தில்தான் செல்லவேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை கடைபிடித்து வாகனங்கள் வருகிதா? என்று சோதனை சாவடி போலீசாரும் கண்காணிக்கவேண்டும். ஆனால் விதிமுறைகளை மீறி அதிக உயரத்தில் பாரத்தை ஏற்றிக்கொண்டு வரும் லாரிகள் திம்பம் மலைப்பாதையை நாள்தோறும் கடக்கின்றன. இதனால் வளைவுகளில் லாரி பழுதாகி நிற்பதும், இதனால் கர்நாடகாவில் இருந்து சத்தி வரும் வாகனங்களும், சத்தியில் இருந்து கர்நாடகா செல்லும் வாகனங்களும் மலைப்பாதையிலேயே பல மணி நேரம் காத்துக்கிடப்பதும் தொடர்கதையாகிவிட்டது.

புகார்

இதுகுறித்து பஸ் டிரைவர்கள், நடத்துனர்கள், பயணிகள் பலர் கூறும்போது,
 
 ‘திம்பம் மலைப்பாதையை கடந்து செல்வது என்பதே பெரிய போராட்டமாக மாறிவிட்டது. சேலம், கிருஷ்ணகிரி, ஒசூர் வழியாக கர்நாடகா செல்ல வேண்டிய லாரிகள் கூட கிலோ மீட்டரை மிச்சப்படுத்துவதற்காக திம்பம் மலைப்பாதையையே பயன்படுத்துகின்றன. மேலும் விதிமுறையை மீறி அதிக பாரத்தை ஏற்றிக்கொண்டு வருகின்றன. சோதனை சாவடி போலீசாரும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். இதனால் மலைப்பாதையில் நடுவழியில் லாரிகள் பழுதாகி நின்றுவிடுகின்றன. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பஸ் பயணிகள்தான்.
 
சிறுத்தைகள் நடமாட்டம் உள்ள மலைப்பாதையில், குடிதண்ணீர் கூட கிடைக்காமல் அவதிப்படுகிறோம். குழந்தைகளை அழைத்துக்கொண்டு வரும் பெற்றோர்கள் படும்பாடு கொடுமையாக உள்ளது. எனவே, அதிக பாரம் ஏற்றிவரும் லாரிகளை மலைப்பாதை தொடக் கத்திலேயே சோதனை சாவடி போலீசார் தடுத்து நிறுத்தினால் போதும். திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாது‘ என்றார்கள்.

Next Story