பஞ்சாலை தொழிலாளர்கள் ஊர்வலம்
முழு சம்பளம் வழங்கக்கோரி பஞ்சாலை தொழிலாளர்கள் ஊர்வலம்
புதுச்சேரி
வருகிற மார்ச் மாதம் முதல் தொழிலாளர் அனைவருக்கும் முழு சம்பளம் வழங்கவேண்டும், நிலுவையில் வழங்கப்படாமல் உள்ள 12 மாத சம்பளத்தை உடனடியாக வழங்கவேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தொழிலக பஞ்சப்படி உயர்வை 1–1–2015 முதல் வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளுக்காக நேற்று ஊர்வலம் நடத்தினார்கள்.
ரோடியர் மில் வாசலில் இருந்து இந்த ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்துக்கு பஞ்சாலை தொழிலாளர் சங்க செயலாளர் அபிசேகம் தலைமை தாங்கினார். ஊர்வலம் கடலூர் சாலை, மறைமலையடிகள் சாலை, அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக ஆம்பூர் சாலை பகுதியை அடைந்தது.
அங்கு கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஊர்வலம்–ஆர்ப்பாட்டத்தில் சங்க தலைவர் ரவி, பொருளாளர் தேசிகன், துணைத்தலைவர் பூபதி, துணை செயலாளர் பச்சையப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.