தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2017 4:15 AM IST (Updated: 15 Feb 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

நிலுவைத்தொகை

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் தீர்த்தகிரி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மல்லையன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சின்னசாமி, நிர்வாகிகள் தங்கராசு, கந்தசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

பசும்பால் 1 லிட்டருக்கு ரூ.35-ம், எருமைப்பால் 1 லிட்டருக்கு ரூ.45-ம் என கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்புக்கு 50 சதவீத மானிய விலையில் தீவனங்கள் வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக தர வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் கடன்கள் அனைத்தையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

நாட்டு மாடுகள்

பால் கொள்முதல் செய்வதற்கான அளவை தினம் 50 லட்சம் லிட்டர் அளவிற்கு உயர்த்த ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் மற்றும் பால் பொருட்களின் இறக்குமதியை தடுத்து நிறுத்த வேண்டும். நாட்டு மாடுகள் இனத்தை பாதுகாக்க பாராளுமன்றத்தில் உரிய சட்டதிருத்தத்தை கொண்டு வந்து சட்டப்பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்கு உலர் தீவனம், வைக்கோல் ஆகியவற்றை பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story