சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறைதண்டனை: பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டதையொட்டி பட்டாசு வெடித்து கொண்டாடினர். அ.தி.மு.க. கட்சி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கு சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சியினர் வரவேற்றுள்ளனர். மேலும் பொதுமக்களும், இளைஞர்களும் சசிகலாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை வரவேற்று சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை செயலாளர் ஆனந்தகுமார் தலைமையில் ஏராளமானோர் திண்டுக்கல் எம்.ஜி.ஆர். சிலை முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர்.
மேலும், முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தீபா ஆகியோருக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். அவர்களுடன் தீபா பேரவையினர் பலரும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். முன்னதாக அவர்கள், எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நத்தம், கோபால்பட்டிஇதேபோல முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும், அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அவர்கள் தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்து கொண்டாடினர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்களும் பங்கேற்றனர்.
நத்தம், கோபால்பட்டி பகுதியில் அ.தி.மு.க. முன்னாள் தொகுதி செயலாளர் கண்ணன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். சின்னாளப்பட்டி பூஞ்சோலை பகுதியில் தீபா பேரவையினர் பட்டாசு வெடித்தனர். வத்தலக்குண்டுவில் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக கோரியும், நத்தம் விசுவநாதன் அமைச்சராக கோரியும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் வத்தலக்குண்டுவில் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ஹபீப்ராஜா தலைமையில் பட்டாசு வெடித்தனர்.
வெறிச்சோடிய கட்சி அலுவலகம்திண்டுக்கல் குள்ளனம்பட்டி நத்தம் சாலையில் மாவட்ட அ.தி.மு.க. கட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் நேற்று வரவில்லை. இதனால் கட்சி அலுவலகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.