உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கிலி வைத்ததால் சசிகலாவுக்கு சிறை வாட்ஸ்–அப் தகவலால் பரபரப்பு
சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கிலி வைத்ததால் சசிகலாவுக்கு சிறை வாட்ஸ்–அப் தகவலால் பரபரப்பு
காங்கேயம்,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் வாட்ஸ்–அப்பில் ஒரு தகவல் வேகமாக பரவியது.
அதில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கிலி வைத்து வழிபட்டு வருவதால் தற்போது சசிகலாவுக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளதாகவும், இது ஆண்டவனின் தீர்ப்பு என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. பெட்டியில் இரும்பு சங்கிலி வைக்கப்பட்டுள்ள படமும் வெளியானது.
ஆண்டவன் உத்தரவு பெட்டி இந்த கோவிலில் மட்டுமே உள்ளது. சிவன்மலை ஆண்டவர் பக்தரின் கனவில் வந்து ஒரு பொருளை கூறி, அதை அந்த கண்ணாடி பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யும்படி உத்தரவிடுவார். அந்த பக்தர் கோவில் நிர்வாகத்திடம் அந்த பொருளை கூறியதும் சிவப்பு, வெள்ளை பூக்கள் வைத்து சாமி உத்தரவு கேட்கப்படும். வெள்ளைப்பூ வந்தால் மட்டுமே அந்த பொருள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பூஜை செய்யப்படும்.
மற்றொரு பக்தருக்கு கனவில் உத்தரவு வரும்வரை அந்த பொருளே நீடிக்கும். கடந்த மாதம் 10–ந்தேதி தாராபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி சிவராம் இந்த இரும்பு சங்கிலியை வைத்தார். சசிகலாவுக்கு சிறை தண்டனை வழங்கியதன் மூலம், சிவன்மலை ஆண்டவன் உத்தரவு நிறைவேற்றப்பட்டுள்ளதாக பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.