தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்: தொழிலாளர்களுக்கு 150 நாட்கள் வேலைவாய்ப்பு கலெக்டர் எஸ்.ஜெயந்தி அறிவிப்பு
தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்: தொழிலாளர்களுக்கு 150 நாட்கள் வேலைவாய்ப்பு கலெக்டர் அறிவிப்பு
திருப்பூர்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஊரக பகுதிகளில் தற்போது ஒரு குடும்பத்திற்கு 100 நாட்கள் வீதம் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை இயல்புக்கு குறைவாக பெய்த காரணத்தாலும், விவசாய வேலைவாய்ப்புகள் குறைந்த காரணத்தாலும் 32 மாவட்டங்களும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வரும் 100 நாட்கள் வேலைவாய்ப்பு, தற்போது வறட்சி பாதித்த மாவட்டங்களில் 2016–17–ம் ஆண்டிற்கு மட்டும் கூடுதலாக 50 நாட்கள் வேலைவாய்ப்புகள் வழங்கி மொத்தம் 150 நாட்களாக உயர்த்தி மத்திய அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே திருப்பூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் வறட்சி மற்றும் விவசாய வேலைவாய்ப்பு இல்லாததால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100 நாட்கள் ஏற்கனவே பணிபுரிந்து முடித்த தொழிலாளர்கள் மேலும் கூடுதலாக 50 நாட்கள் வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம்.
இந்த தகவலை கலெக்டர் எஸ்.ஜெயந்தி தெரிவித்துள்ளார்.