திருப்பூர் மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
திருப்பூர் மாவட்டத்தில் வறட்சி பாதிப்பு குறித்து பல்வேறு துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு பணி மேற்கொண்டுள்ளனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் வறட்சி பாதிப்பு குறித்து பல்வேறு துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு பணி மேற்கொண்டுள்ளனர். இந்த கணக்கெடுப்பு பணி விவரங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஊத்துக்குளி ஒன்றியம் கவுண்டம்பாளையம் ஊராட்சியில் கருமகவுண்டனூர் மற்றும் ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட ராக்கியாபாளையம் பகுதிகளில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டிருந்த சோளப்பயிர் மற்றும் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் படியூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்குபாளையம் மற்றும் சம்மந்தாம்பாளையம் பகுதிகளில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் வறட்சியால் கருகிய தென்னை மரங்களையும், மேற்கு தோட்டம் பகுதியில் 3 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டிருந்த சோளப்பயிரையும் கலெக்டர் எஸ்.ஜெயந்தி ஆய்வு செய்தார்.
மேலும் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் செங்கோடம்பாளையம் ஊராட்சியில் ஊதியூரில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டிருந்த சோளப்பயிர், பெருமாள்பாளையம் ஊராட்சியில் தாயம்பாளையத்தில் 2 ஏக்கரில் பயிரிட்டிருந்த கொள்ளு பயிர் சேதங்களையும் ஆய்வு செய்தார். சேத விவர பதிவு பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்றும், மேற்கண்ட பகுதியில் குடிநீர் வசதிகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ரெங்கநாதன், தாசில்தார்கள் ஜெய்சிங்(ஊத்துக்குளி), வெங்கடலட்சுமி(காங்கேயம்) மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.