கோவில்பட்டியில், அடுத்தடுத்த விபத்துகளில் சிக்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி மேலும் 3 பேர் படுகாயம்


கோவில்பட்டியில், அடுத்தடுத்த விபத்துகளில் சிக்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி மேலும் 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 16 Feb 2017 1:30 AM IST (Updated: 16 Feb 2017 12:20 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் சிக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் சிக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

என்ஜினீயரிங் மாணவர்

கோவில்பட்டி சிந்தாமணி நகரை சேர்ந்த மாரியப்பன் மகன் திருப்பதி (வயது 22). இவர் பொக்லைன் டிரைவராக வேலை செய்து வந்தார். கோவில்பட்டி புது கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி மகன் பார்த்தீபன் (22). இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். கோவில்பட்டி செக்கடி தெருவை சேர்ந்த மாணிக்கராஜ் மகன் அருணாசலம் (22). கூலி தொழிலாளி. இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

இந்த 3 பேரும் நேற்று முன்தினம் இரவு 9.45 மணி அளவில் கோவில்பட்டியில் இருந்து கழுகுமலைக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணியை சேர்ந்த சின்னமுத்து மகன் குருசாமி (37). சுமை தூக்கும் தொழிலாளி. கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்தவர் வேல் மகன் கார்த்திக் (35). லாரி டிரைவர். இந்த 2 பேரும் வானரமுட்டியில் இருந்து கோவில்பட்டிக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் வழியாக சென்றபோது, எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற திருப்பதி, பார்த்தீபன், அருணாசலம், குருசாமி, கார்த்திக் ஆகிய 5 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

பஸ் சக்கரத்தில் சிக்கி...

அப்போது, கோவில்பட்டியில் ஆட்களை இறக்கி விட்டு, நாலாட்டின்புத்தூரில் உள்ள பணிமனைக்கு சென்ற தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக திருப்பதியின் உடலில் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 பேரும் படுகாயங்களுடன் சாலையில் கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

மாணவர் சாவு

படுகாயம் அடைந்த பார்த்தீபன் உள்ளிட்ட 4 பேருக்கும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவரான பார்த்தீபன் பரிதாபமாக உயிரிழந்தார். அருணாசலம் உள்ளிட்ட 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இறந்த திருப்பதியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story