நெல்லை அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை வாங்க மறுத்து 2–வது நாளாக உறவினர்கள் போராட்டம்
நெல்லை அருகே தற்கொலை செய்து கொண்ட என்ஜினீயரிங் மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2–வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடையநல்லூர்,
நெல்லை அருகே தற்கொலை செய்து கொண்ட என்ஜினீயரிங் மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2–வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
என்ஜினீயரிங் மாணவி தற்கொலைநெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மங்களாபுரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மகாதேவி(வயது 18). இவர் நெல்லை அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 13–ந் தேதி கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மகாதேவி, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் மாணவியின் உடல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்தும், மாணவியின் உடலை வாங்குவதற்கு அவரது உறவினர்கள் மறுத்தனர்.
தாலுகா அலுவலகம் முற்றுகைதற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்றும் மாணவியின் உடலை வாங்க மறுத்து 2–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியின் உறவினர்கள் மற்றும் மங்களாபுரத்தை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் டேனியல் அருள்சிங், புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், முஸ்லிம் லீக் அமைப்பு செயலாளர் மஜீத், மங்களாபுரம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தைபோராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கடையநல்லூர் தாசில்தார் மாரியப்பன், புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நடவடிக்கை எடுக்கவிட்டால் சாதிச் சான்று, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை அரசிடம் ஒப்படைத்து விட்டு மீண்டும் போராட்டத்தை தொடருவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.