பெங்களூருவில் இருந்து சிக்கமகளூரு, சிருங்கேரி, நாபொக்லு, கோட்டயத்துக்கு புதிய பஸ் சேவை
பெங்களூருவில் இருந்து சிக்கமகளூரு, சிருங்கேரி, நாபொக்லு, கோட்டயத்துக்கு புதிய பஸ் சேவை தினமும் இயக்கப்பட உள்ளதாக கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில் இருந்து சிக்கமகளூரு, சிருங்கேரி, நாபொக்லு, கோட்டயத்துக்கு புதிய பஸ் சேவை தினமும் இயக்கப்பட உள்ளதாக கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
பெங்களூரு–சிக்கமகளூருபெங்களூருவில் இருந்து சிக்கமகளுரு, சிருங்கேரி, நாபொக்லு, கோட்டயம் ஆகிய பகுதிகளுக்கு தினமும் இயங்கும் வகையில் புதிதாக சொகுசு பஸ் சேவையை தொடங்க கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்தது.
அதன்படி, பெங்களூரு–சிருங்கேரி இடையேயான புதிய சொகுசு பஸ் சேவை நேற்று தொடங்கியது. பெங்களூருவில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் இந்த பஸ் காலை 6.30 மணிக்கு சிருங்கேரியை சென்றடையும். மறுமார்க்கமாக, சிருங்கேரியில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் பஸ் மறுநாள் காலை 6 மணிக்கு பெங்களூருவை வந்தடையும். ஹாசன், சிக்கமகளூரு வழியாக இயங்கும் இந்த பஸ்சில் பயணி ஒருவருக்கு ரூ.650 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல், பெங்களூரு–சிக்கமகளூரு இடையேயான புதிய சொகுசு பஸ் சேவை இன்று (வியாழக்கிழமை) தொடங்க உள்ளது. இந்த பஸ் பெங்களூருவில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு சிக்கமகளூருவை சென்றடையும். மறுமார்க்கமாக, சிக்கமகளூருவில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும் பஸ் இரவு 7 மணிக்கு பெங்களூருவை வந்தடையும். இந்த பஸ் சென்னராயப்பட்டணா, ஹாசன் வழித்தடத்தில் இயங்கும். இந்த பஸ்சில் பயணி ஒருவருக்கு ரூ.500 கட்டணமாக ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு–கோட்டயம்மேலும், பெங்களூரு–கோட்டயம் இடையே படுக்கை வசதி கொண்ட சொகுசு பஸ் இன்று முதல் இயக்கப்பட இருக்கிறது. இந்த பஸ் பெங்களூருவில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு கோட்டயம் சென்றடையும். மறுமார்க்கமாக, கோட்டயத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் பஸ், மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு பெங்களூருவை வந்தடையும். கோயம்புத்தூர், பாலக்காடு, திரிச்சூர் வழியாக இயங்கும் இந்த பஸ்சில் பயணி ஒருவருக்கு ரூ.1,061 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேப்போல், பெங்களூரு (வித்யாரண்யபுரா)–நாபொக்லு இடையேயான சொகுசு பஸ் சேவை நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ளது. பெங்களூருவில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் இந்த பஸ் அதிகாலை 4.45 மணிக்கு நாபொக்லுவை சென்றடையும். மறுமார்க்கமாக, நாபொக்கலுவில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் பஸ் மதியம் 12.45 மணிக்கு பெங்களூருவை வந்தடையும். மைசூரு, கோணிகொப்பா, அமத்தி வழியாக இயங்கும் இந்த பஸ்சில் பயணி ஒருவருக்கான கட்டணம் ரூ.392 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல் கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.