சண்டையின் போது கொம்புகள் சிக்கியதால் காட்டெருமைகள் சாவு


சண்டையின் போது கொம்புகள் சிக்கியதால் காட்டெருமைகள் சாவு
x
தினத்தந்தி 16 Feb 2017 4:00 AM IST (Updated: 16 Feb 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே சண்டையின் போது 2 காட்டெருமைகளின் கொம்புகள் சிக்கியதால் பரிதாபமாக இறந்தன.

காட்டெருமைகள்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள மந்தாடா பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டெருமைகள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. நேற்று காலை 5 மணிக்கு இந்த வனப்பகுதியில் 2 பெண் காட்டெருமைகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

அந்த காட்டெருமைகள் குடியிருப்புக்கு அருகில் மோதிக்கொண்டன. இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் இது வழக்கமாக நடக்கும் சண்டை என்று கருதி அமைதியாக இருந்து விட்டனர். சிறிது நேரத்தில் அந்த காட்டெருமைகள் ஊட்டி–குன்னூர் சாலைக்கு வந்து சண்டையிட தொடங்கின. இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

கொம்புகள் சிக்கின

இதனிடையே மோதிக்கொண்ட 2 காட்டெருமைகளின் கொம்புகள் ஒன்றுக்குள் ஒன்று சிக்கிக்கொண்டன. மேலும் ஒரு காட்டெருமையின் கொம்பு மற்றொரு காட்டெருமையின் தலையில் குத்தியதால், கொம்புகளை விடுவிக்க போராடின. இதனை கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் வனச்சரகர் சரவணக்குமார் தலைமையில் வனத்துறையினர் விரைந்து வந்து காட்டெருமைகளை கண்காணித்தனர். ஆனால் கொம்புகள் நன்றாக சிக்கி கொண்டதால் அதனை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கால்நடை டாக்டரை அழைக்க முடிவு செய்யப்பட்டது.

சாவு

பின்னர் கேத்தி கால்நடை டாக்டர் பார்த்தசாரதி வரவழைக்கப்பட்டார். அவர் 2 காட்டெருமைகளுக்கும் மயக்க ஊசி செலுத்தினார். இதனால் 2 காட்டெருமைகளும் மயக்கம் அடைந்தன. தொடர்ந்து காட்டெருமைகளின் சிக்கி கொண்ட கொம்புகளின் முனைப்பகுதி வெட்டி அகற்றப்பட்டு, 2 காட்டெருமைகளும் விடுவிக்கப்பட்டன.

மயக்கம் தெளிந்து சிறிது நேரத்தில் காட்டெருமைகள் எழுந்து காட்டுக்குள் செல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த நேரத்தில் 2 காட்டெருமைகளும் பரிதாபமாக இறந்தன. இதனால் வனத்துறையினர் கவலை அடைந்தனர். இந்த சம்பவத்தால் ஊட்டி–குன்னூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேடி வந்த ஆண் காட்டெருமை

முன்னதாக கொம்புகள் சிக்கிக்கொண்டு காட்டெருமைகள் ஊட்டி–குன்னூர் சாலையோரத்தில் படுத்து கிடந்தன. அப்போது ஒரு ஆண் காட்டெருமை, இந்த பெண் காட்டெருமைகளை தேடி வந்தது. வனத்துறையினர் விரட்டிய போதும், பெண் காட்டெருமைகளின் அருகில் சென்று சிறிது நேரம் முகர்ந்து பார்த்தது.

தொடர்ந்து வனத்துறையினர் விரட்டியதால், ரோட்டின் மேல்பகுதியில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றது. ஆனால் அங்கிருந்தபடி சத்தம் போட்டுக்கொண்டு, பெண் காட்டெருமைகளை பார்த்தபடி நின்றது அனைவரது மனதிலும் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

படுகாயம்

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், சண்டையினால் காட்டெருமைகளின் கழுத்து மற்றும் தலையில் படுகாயம் ஏற்பட்டு இருந்தது. இதனால் அவைகள் இறந்து இருக்கலாம் என்றனர்.

இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் கூறியதாவது:–

வனத்துறையில் போதிய கால்நடை டாக்டர்கள் இல்லை. முதுமலை புலிகள் காப்பகத்திற்கு மட்டும் ஒரே ஒரு டாக்டர் உள்ளார். வன விலங்குகள் அதிகம் உள்ள நீலகிரி மாவட்டத்திற்கு கூடுதலாக 2 கால்நடை டாக்டர்களை நியமனம் செய்ய வேண்டும். அப்போதுதான் பாதிப்படைந்த வன விலங்குகளுக்கு விரைந்து சென்று சிகிச்சை அளிக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story