ஒட்டன்சத்திரத்தில் தொழில் அதிபர் காரில் கடத்தல்
ஒட்டன்சத்திரத்தில் நள்ளிரவில் பரபரப்பு: தொழில் அதிபர் காரில் கடத்தல் தனிப்படை போலீசார் தேடுதல்வேட்டை
ஒட்டன்சத்திரம்,
ஒட்டன்சத்திரத்தில், நள்ளிரவில் தொழில் அதிபர் ஒருவரை மர்ம நபர்கள் காரில் கடத்திச்சென்றுவிட்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
தொழிலதிபர்திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 60). தொழில் அதிபர். ஒட்டன்சத்திரத்தில் சினிமா தியேட்டர் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மலர்விழி. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அருணாச்சலத்திற்கு அசோக்குமார் என்ற மகனும், ரேவதி, திவ்யா என்ற 2 மகள்களும் உள்ளனர். இதில் 2 மகள்களும் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். அசோக்குமாருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் தந்தையும், மகனும் மட்டும் ஒட்டன்சத்திரம் வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அருணாச்சலம், ஒட்டன்சத்திரம்–பழனி சாலையில் நகராட்சி அலுவலகம் அருகே தனக்கு சொந்தமான தியேட்டருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் தியேட்டர் நிர்வாக பணிகள் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்துவிட்டு நள்ளிரவு 1 மணியளவில் வீட்டிற்கு திரும்பினார்.
கடத்தல்வீட்டின் நுழைவு வாயில் அருகே சென்றதும், மோட்டார் சைக்கிளை நிறுத்திய அருணாச்சலம் அங்கிருந்த கதவை திறக்க முயன்றார். அப்போது அவருடைய வீட்டின் அருகே காரில் பதுங்கி இருந்த சிலர் கண் இமைக்கும் நேரத்திற்குள் அங்கு வந்து அருணாச்சலத்தை பிடித்து காரில் கடத்திச்சென்றுவிட்டனர்.
அடுத்த நாள் காலையில் தூக்கத்தில் இருந்து கண்விழித்த அசோக்குமார் வீட்டைவிட்டு வெளியே வந்தார். அப்போது, வீட்டின் நுழைவு வாயில் அருகே தந்தையின் மோட்டார் சைக்கிள் நிற்பதை பார்த்து சந்தேகமடைந்தார். உடனே வீட்டிற்குள் சென்று அவர் தேடியபோது அவரை காணவில்லை.
காரில் வந்த 5 பேர்இதையடுத்து மீண்டும் நுழைவு வாயில் பகுதிக்கு வந்து அசோக்குமார் பார்த்தபோது, மோட்டார் சைக்கிள் அருகே, தந்தையின் காலணிகள் சிதறி கிடப்பதையும், சாலையில் ஒரு காரின் டயர் தடம் பதிந்து இருப்பதையும் பார்த்தார். இதற்கிடையே அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் நேற்று முன்தினம் இரவு அருணாச்சலம் வீட்டின் அருகே ஒரு கார் வெகுநேரமாக நின்றிருந்ததையும், அதில் 5 பேர் இருந்ததையும் பார்த்ததாக கூறியுள்ளனர். மேலும் நள்ளிரவில் வீட்டின் அருகே யாரோ அலறும் சத்தம் கேட்டதாகவும் கூறியுள்ளனர். அதனால் காரில் வந்த மர்ம நபர்களே அருணாசலத்தை கடத்தி சென்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஒட்டன்சத்திரம் போலீசில் அசோக்குமார் புகார் அளித்தார்.
தனிப்படை போலீசார் தேடுதல்வேட்டைஇதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தேஸ்முக் சேகர்சஞ்சயும் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து தொழில் அதிபரை கடத்திச்சென்றவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தும்படி போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.
அதன்படி போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும் கடத்தப்பட்ட அருணாச்சலத்திற்கு தொழில் ரீதியாக யாருடனாவது விரோதம் உள்ளதா? அதன் காரணமாக கூலிப்படையை வைத்து அவர்கள் கடத்தினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு வேளையில் தொழில் அதிபர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கண்காணிப்பு கேமராவில் சிக்கிய கடத்தல் கும்பல்தொழில் அதிபர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பக்கத்துவீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர்.
அதில், நள்ளிரவில் வீட்டிற்கு வந்த அருணாசலத்தை 5 பேர் கொண்ட கும்பல் பிடித்து காரில் ஏற்றி கடத்திச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து அந்த காட்சியில் பதிவான கடத்தல்காரர்களின் உருவங்களை புகைப்படமாக எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களுக்கு பழைய குற்ற வழக்குகளில் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரித்து வருகின்றனர்.
--–
புட்நோட்
--–
மர்ம நபர்களால் கடத்தப்பட்ட தொழில் அதிபர் அருணாச்சலம்.
--–
கடத்தப்பட்ட தொழில் அதிபர் வீட்டுக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தேஸ்முக் சேகர்சஞ்சய் நேரடியாக வந்து விசாரணை நடத்திய போது எடுத்த படம்.
–