திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்


திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்
x
தினத்தந்தி 16 Feb 2017 4:30 AM IST (Updated: 16 Feb 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினர். இதில் காளைகளிடம் சிக்கி 35 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஜல்லிக்கட்டு

திண்டுக்கல்லை அடுத்த புகையிலைப்பட்டியில் புனித சந்தியாகப்பர் செபஸ்தியார் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம்கோர்ட்டு தடை விதித்ததால் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. தற்போது ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை விலகியதால் ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்தனர்.

இதற்காக வாடிவாசல் அமைக்கும் பணி, பார்வையாளர் ‘கேலரி’ அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்தது. அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் கற்பகம் தலைமை தாங்கி ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.

பார்வையாளர்கள் ஆரவாரம்

ஜல்லிக்கட்டில் திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 318 காளைகள் கலந்து கொண்டன. காளைகளை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். காளைகளை அடக்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 250 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன.

காலை 10 மணிக்கு வாடிவாசலில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்கள் கரகோ‌ஷம் முழங்க, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். இதனால் மாடிபிடி வீரர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்க முயன்றனர்.

மல்லுக்கட்டிய வீரர்கள்

களத்தில் துள்ளிக்குதித்த காளைகளை பிடிக்க இளைஞர்கள் முண்டியடித்தனர். அவர்களின் பிடியில் சிக்காமல் காளைகள் ஓடியது. சில காளைகள் களத்தில் நின்று வீரர்களை நாலாபுறமும் சிதறடித்தது. எனினும் சளைக்காமல் வீரர்கள் காளைகளிடம் மல்லுக்கட்டினர். சில காளைகள் வந்த வேகத்திலேயே வெளியே ஓடியது. சில காளைகள் சுற்றும், முற்றும் பார்த்து வீரர்களை பயமுறுத்தின.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி காசு, பீரோ, கட்டில், சைக்கிள், எவர்சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.

35 பேர் படுகாயம்

காளைகளிடம் சிக்கி புகையிலைபட்டியை சேர்ந்த ஜான்பீட்டர் (வயது 45), கிருஷ்ணன் (31), பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த சவுந்தரராஜன், இன்பென்ட் (19), ஆரோக்கியதாஸ் (30), முத்தழகுபட்டி எத்தப்பன் (47), வேடசந்தூர் அஜித் (20), மேட்டுக்கடை வீரன் (25) உள்பட 35 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் மலர்விழி தலைமையிலான மருத்துவக்குவினர் சிகிச்சை அளித்தனர். இதில் சவுந்தரராஜன் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு பணியில் திண்டுக்கல் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு கோபால் தலைமையிலான 250–க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை புகையிலைபட்டி ஊர்பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு நடந்ததால் இதனை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.


Next Story