ஓ.பன்னீர்செல்வம் முதல்–அமைச்சராக நீடிக்க வலியுறுத்தி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்
ஓ.பன்னீர்செல்வம் முதல்–அமைச்சராக நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. தொண்டர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 40). அ.தி.மு.க. தொண்டரான இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பூமல்லி. இவர் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஆவார். இந்த நிலையில் சுந்தரமூர்த்தி நேற்று மதியம் 1 மணி அளவில், பட்டிவீரன்பட்டி 2–வது வார்டு ரைஸ்மில் தெருவுக்கு வந்தார்.
பின்னர் அங்கிருந்த சுமார் 70 அடி உயரம் கொண்ட செல்போன் கோபுரத்தின் மீது ஏறினார். அதைத்தொடர்ந்து தமிழக முதல்–அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நீடிக்க வேண்டும் என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கிடையே செல்போன் கோபுரத்தில் ஏறி அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்த தகவலறிந்த அப்பகுதி மக்கள் அங்கு கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலை மிரட்டல்இந்த நிலையில் சம்பவம் குறித்து தகவலறிந்த பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கருணாகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சுந்தரமூர்த்தியை கீழே இறங்கும்படி தெரிவித்தனர். மேலும் செல்போன் கோபுரத்தில் ஏறி அவரை மீட்கவும் முயன்றனர். இதைப்பார்த்த சுந்தரமூர்த்தி தன்னை மீட்க வந்தால் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்வேன் என்று மிரட்டல் விடுத்தார். இதையடுத்து வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் அருளானந்து தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சுந்தரமூர்த்தியை கீழே இறங்கும்படி கூறினர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து அவர் கீழே குதித்தாலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீயணைப்பு துறையினர் செய்தனர். பின்னர் கோபுரத்தில் ஏறி சுந்தரமூர்த்தியை மீட்டு கீழே கொண்டு வந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.