வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்த பகுதிகளில் கலெக்டர் மேலாய்வு
சிதம்பரம், புவனகிரி மற்றும் காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்த பகுதிகளை கலெக்டர் ராஜேஷ் மேலாய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை சராசரி அளவைவிட மிகக்குறைவாக பெய்ததன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக அரசு அறிவித்து, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரணங்களையும் அறிவித்தது. இதன் அடிப்படையில் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் தொடர்பான கணக்கெடுக்கும் பணி வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளது.
இதன்படி மாவட்டத்தில் வறட்சியால் 65 ஆயிரத்து 714 ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களும், 84 ஆயிரத்து 192 விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 28 ஆயிரத்து 680 ஹெக்டேர் நிலங்களில் நெல் பயிரிட்ட 32 ஆயிரத்து 218 விவசாயிகளும், 18 ஆயிரத்து 534.4 ஹெக்டேர் நிலங்களில் மக்காச்சோளம் பயிரிட்ட 21 ஆயிரத்து 7 விவசாயிகளும், 4 ஆயிரத்து 899.6 ஹெக்டேர் நிலங்களில் பருத்தி பயிரிட்ட 7 ஆயிரத்து 668 விவசாயிகளும், 12 ஆயிரத்து 550.20 ஹெக்டேர் நிலங்களில் உளுந்து பயிரிட்ட 21 ஆயிரத்து 687 விவசாயிகளும், ஆயிரத்து 49.80 ஹெக்டேர் நிலங்களில் வரகு பயிரிட்ட 1,612 விவசாயிகளும் அடங்குவர்.
மேலும் பட்டு வளர்ச்சித்துறையின் மூலம் 1.5 ஹெக்டேர் நிலங்களில் மல்பரி செடி பயிரிட்ட 3 விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கலெக்டர் மேலாய்வுதமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, வறட்சியால் பாதிப்படைந்துள்ள பயிர்கள் தொடர்பாக நிறைவுபெற்றுள்ள கணக்கெடுப்பு பணியினை மாவட்ட கலெக்டர், வருவாய் அலுவலர், ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், வேளாண்மை இணை இயக்குனர், துணை ஆட்சியர்கள் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர்கள் ஆகியோர்களால் மேலாய்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் புவனகிரி தாலுகாவுக்குட்பட்ட வில்லியநல்லூர் மற்றும் சின்னகுமட்டி, சிதம்பரம் தாலுகாவுக்குட்பட்ட கீழ் அனுவம்பட்டு, நக்கிரவந்தன்குடி, காட்டுமன்னார்கோவில் தாலுகாவுக்குட்பட்ட மெய்யாத்தூர், தெம்மூர் மற்றும் வீரநத்தம் ஆகிய கிராமங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் தொடர்பாக நிறைவுபெற்றுள்ள கணக்கெடுப்பு பணிகளை கலெக்டர் ராஜேஷ் மேற்கண்ட கிராமங்களில் மேலாய்வு மேற்கொண்டார்.
அப்போது சிதம்பரம் கோட்டாட்சியர் விஜயலட்சுமி, புவனகிரி தாசில்தார் வேணி, சிதம்பரம் தாசில்தார் மகேஷ், காட்டுமன்னார்கோவில் தாசில்தார் ஜெயந்தி, வேளாண் அலுவலர் பூவராகவன், உதவி இயக்குநர்கள் ரமேஷ், வேல்விழி, வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.