ஈரோடு மணல்மேட்டில் உள்ள வீடுகளை இடிக்கக்கூடாது கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


ஈரோடு மணல்மேட்டில் உள்ள வீடுகளை இடிக்கக்கூடாது கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 16 Feb 2017 3:45 AM IST (Updated: 16 Feb 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி ஈரோடு மணல்மேட்டில் உள்ள 534 வீடுகளை இடிக்கக்கூடாது என கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

534 வீடுகள்

ஈரோடு மாநகராட்சி 51–வது வார்டுக்கு உட்பட்ட மணல்மேடு பகுதியை சேர்ந்த 150 பெண்கள் உள்பட 200–க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அ.தி.மு.க. இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி.பி.கே.மணிகண்டன் தலைமையில், பெரியார் நகர் பகுதி செயலாளர் மனோகரன், மாவட்ட பிரதிநிதி பழனிச்சாமி ஆகியோர் முன்னிலையில் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–

ஈரோடு மணல்மேடு பகுதியில் கடந்த 80 ஆண்டுகளாக 534 வீடுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். தற்போது எங்கள் வீடுகள் நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளது என்றும், அதனால் உடனடியாக வீடுகளை காலிசெய்ய வேண்டும் என்றும் குடிசை மாற்று வாரியம் சார்பில் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

இடிக்கக்கூடாது

நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருகிறோம். அதனால் எங்களால் வேறு இடங்களுக்கு சென்று வாடகை வீட்டில் குடியிருந்து குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலையில் உள்ளோம். மேலும் எங்களது குழந்தைகளின் படிப்பும் பாதிக்கும். எனவே எங்களது வீடுகளை இடிக்காமல் நாங்கள் தொடர்ந்து அந்த இடத்திலேயே குடியிருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தார்கள்.


Next Story