மயானத்தில் பிணத்தை புதைப்பது தொடர்பான பிரச்சினை அதிகாரிகள் சமசர பேச்சுவார்த்தை
மடத்துக்குளம் அருகே மயானத்தில் பிணத்தை புதைப்பது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் சமசர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மடத்துக்குளத்தை அடுத்த காரத்தொழுவில் பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் காரத்தொழுவு தாராபுரம் ரோடு பகுதியில் உள்ள மயானத்தில் இறந்தவர்களை புதைப்பது தொடர்பாக இருதரப்பை சேர்ந்தவர்களுக்கு இடையே நீண்டநாட்களாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த மயானம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கும் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதையடுத்து ஒரு தரப்பினருக்கு அரசு தரப்பில் மயானத்திற்கு மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இருதரப்பினரும் தாராபுரம் ரோட்டில் உள்ள மயானத்திற்கு சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். இதனால் இந்த பிரச்சினை முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது.
பதற்றம்இந்த நிலையில் காரத்தொழுவில் ஒரு பிரிவை சேர்ந்த ஒருவர் உடல் நலக்குறைவால் நேற்று இறந்தார். இதேபோல் மற்றொரு தரப்பை சேர்ந்த மூதாட்டியும் உடல் நலக்குறைவால் இறந்தார்.
இதனால் இருதரப்பினரும் தாராபுரம் ரோட்டில் உள்ள மயானத்தில் உடலை அடக்க செய்ய ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினரும் மோதும் சூழ்நிலை உருவானதால் பதற்றம் ஏற்பட்டது. இது குறித்து போலீசாருக்கும், உடுமலை ஆர்.டி.ஓ.வுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தைஉடனே ஆர்.டி.ஓ. சாதனைக்குறள், உடுமலை கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு பாண்டியராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அதன்பின்னர் ஆர்.டி.ஓ., இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தையின் முடிவில் ஒரு தரப்பினர் தாராபுரம் ரோட்டில் உள்ள மயானத்திலும், மற்றொரு தரப்பினர் சோழமா தேவி பகுதியில் உள்ள மயானத்திலும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி உடலை அடக்கம் செய்தனர்.