மத வழிபாடு நடத்த இடம் ஒதுக்க வேண்டும் பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு


மத வழிபாடு நடத்த இடம் ஒதுக்க வேண்டும் பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 16 Feb 2017 3:45 AM IST (Updated: 16 Feb 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் 36–வது வார்டுக்குட்பட்ட பகுதியில் மத வழிபாடு நடத்த இடம் ஒதுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

கலெக்டரிடம் மனு

திருப்பூர் மாநகர் 36–வது வார்டுக்குட்பட்ட பாலாஜிநகர், அமராவதிநகர், ஐம்பொன் நகர், தீரன் சின்னமலை நகர், பி.ஏ.பி.நகர், கார்த்தி நகர், குருவாயூரப்பன் நகர், ஐயப்பாநகர், கோடீஸ்வராநகர், அண்ணநகர், பிள்ளையார்நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள் அங்கு கலெக்டர் எஸ்.ஜெயந்தியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

போலீசார் நடவடிக்கை

நாங்கள் இந்த பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக எங்கள் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறோம். இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு வழிபாடு நடத்த கோவில் இங்கு இல்லை. இதனால் நாங்கள் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்றால் 4 முதல் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நல்லூர் அல்லது முத்தணம்பாளையம் பகுதிக்கே சென்று வழிபட வேண்டிய நிலை உள்ளது.

ஆகவே நாங்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் இணைந்து பி.ஏ.பி. வாய்க்காலுக்கு சொந்தமான இடத்தில் 1½ அடி உயரமுள்ள விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்து வழிபட்டு வந்தோம். இந்த நிலையில் இன்று(நேற்று) காலை 10.30 மணியளவில் அந்த பகுதிக்கு வந்த போலீசார் எங்களின் எதிர்ப்பையும் மீறி அங்கு வைத்து வழிபாடு நடத்தி கொண்டிருந்த விநாயகர் சிலையை எடுத்து சென்று விட்டனர்.

இடம் ஒதுக்கவேண்டும்

இதனால் பொதுமக்களாகிய எங்களுக்கு வழிபாடு நடத்த இடம் ஒதுக்க வேண்டும். மேலும், எங்கள் பகுதியில் குப்பைதொட்டி, தெரு விளக்கு உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்து வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே எங்கள் கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story