தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளால் பொதுமக்கள் அச்சம்
தொண்டியில் மதுரை–தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் மின்கம்பிகள் தாழ்வாக தொங்குவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தொண்டி பழைய பஸ் நிலையம் அருகே செய்யது முகமது அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு அருகே மதுரை– தொண்டி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சாலையோரத்தில் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கின்றன. மேலும் இந்த மின் கம்பிகள் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதால் முற்றிலும் பழுதடைந்து உள்ளது.
இதனால் எப்போது வேண்டுமானாலும் இந்த கம்பிகள் முறிந்து கீழே விழும் அபாயம் உள்ளது. இந்த மின்கம்பிகள் செல்லும் சாலையை கடந்து தான் தினமும் ஏராளமான மாணவ–மாணவிகள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். சைக்கிளில் செல்லும் மாணவர்கள் மீது மின்கம்பிகள் உரசும் அளவிற்கு மிகவும் தாழ்வாக தொங்குவதாலும், பழுதடைந்த கம்பிகளாக இருப்பதாலும் மாணவர்கள் மட்டுமின்றி இப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்களும் ஒருவித அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
அச்சம்எனவே ஏதேனும் உயிர்சேதம் ஏற்படும் முன்பாக மின்வாரிய அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு போர்க்கால நடவடிக்கை அடிப்படையில் தொண்டியில் பள்ளிகளுக்கு அருகே சாலை ஓரத்தில் தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை அகற்றி விட்டு புதிய மின் கம்பிகளை மிக உயரமாகவோ அல்லது இந்த இடத்தில் பாதுகாப்பு கருதி மண்ணுக்குள் செல்லும் கேபிளாகவோ மாற்றி அமைக்க வேண்டும் என்று த.மு.மு.க. மாவட்ட செயலாளர் சாதிக் பாட்சா, மனிதநேய மக்கள் கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் தொண்டிராஜ் ஆகியோர் மாவட்ட கலெக்டர் மற்றும் மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.