சொட்டுநீர் பாசன கருவிகளுக்கு 100 சதவீத மானியம்


சொட்டுநீர் பாசன கருவிகளுக்கு 100 சதவீத மானியம்
x
தினத்தந்தி 16 Feb 2017 4:00 AM IST (Updated: 16 Feb 2017 3:00 AM IST)
t-max-icont-min-icon

சொட்டுநீர் பாசன கருவிகளுக்கு 100 சதவீத மானியம் கலெக்டர் மலர்விழி தகவல்

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசன கருவிகள், மழை தூவுவான்கள் வழங்கப்பட உள்ளன என்று மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

மழை தூவுவான்கள்

சிவகங்கை மாவடட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சிவகங்கை மாவட்டத்தில் தற்போது கிடைக்கும் நீரை பயன்படுத்தி தென்னை மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்திட சொட்டுநீர் பாசன கருவிகள் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வழங்கப்படுகின்றன. இதேபோல் வேளாண்மை துறையின் மூலம் பயறு மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு குறைந்த அளவு நீரை பயன்படுத்தி அதிக மகசூல் பெற்றிட மழை தூவுவான்கள் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் மானிய விலையில் மழை தூவுவான்கள் மற்றும் சொட்டுநீர் பாசன கருவிகளை பெற்று, குறைந்த அளவு நீரில் பயறு மற்றும் நிலக்கடலை பயிர்களை சாகுபடி செய்து அதிக மகசூல் பெற்று பயனடையலாம்.

பயறு சாகுபடி

இதேபோன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் உளுந்து வம்பன்–5, வம்பன்–6 ரக விதைகள் மற்றும் உயர் ரக பயறு விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போது பெய்துள்ள மழை நீரை பயன்படுத்தி பயறு வகை பயிர்களை சாகுபடி செய்து அதிக வருமானம் பெறலாம். எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, உளுந்து மற்றும் பயிர் ரக விதைகளை மானிய விலையில் பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story