தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு
சிங்கம்புணரி அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்டது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்டது. தண்ணீர் தேடி வந்து மான்களை இறப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புள்ளிமான் மீட்புசிங்கம்புணரி அருகே உள்ள முறையூர் தெற்குவளவு பகுதியில் உள்ள சுப்பையா என்பவரது வீடு அருகில் உள்ள பழமையான கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் தற்போது தண்ணீர் இல்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் ஒன்று, கிணற்றில் தவறி விழுந்துள்ளது. பின்னர் நேற்று காலை புள்ளிமான், கிணற்றில் இருந்து ஒருவித ஒலி எழுப்பிக்கொண்டிருந்தது. இதனால் கிணற்றின் அருகே உள்ள சுப்பையா கிணற்றில் பார்த்தபோது கிணற்றில் புள்ளிமான் ஒன்று மருவிக்கொண்டிருந்தது. உடனே இதுகுறித்து அவர் சிங்கம்புணரி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர்(பொறுப்பு) கிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள், வனவர் சம்பத் குமரன் தலைமையில் வனத்துறை அதிகாரிகள், எஸ்.வி.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் முறையூர் கிராமமக்களுடன் சேர்ந்து கிணற்றில் விழுந்த புள்ளிமானை உயிருடன் மீட்டனர். பின்னர் புள்ளிமானை வனப்பகுதிக்குள் கொண்டுபோய் விட்டனர்.
தண்ணீர் தேடி...இதுகுறித்து வனவர் சம்பத்குமரன் கூறும்போது, இப்பகுதியில் உள்ள முறையூர், அய்யாப்பட்டி, செவல்பட்டி ஆகிய பகுதிகளில் மான்கள் அதிகமாக வசித்து வருகின்றன. தற்போது கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தண்ணீர் தேடி மான்கள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. அவ்வாறு வரும்போது தான் புள்ளிமான் கிணற்றில் தவறி விழுந்துள்ளது. எனவே தரைமட்டத்தில் உள்ள கிணறுகளை சுற்றி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்றார்.
பொதுமக்கள் கூறும்போது, காட்டுப்பகுதியில் தண்ணீர் இல்லாத காரணத்தால் தான் மான்கள் ஊருக்குள் தண்ணீர் தேடி வருகின்றன. ஊருக்குள் வரும் மான்கள் வாகனத்தில் அடிப்பட்டும், நாய்கள் கடித்தும், கிணற்றில் தவறி விழுந்தும் இறப்பது தொடர்கதையாகி வருகிறது. எனவே காட்டுப்பகுதியில் அவைகளுக்கு தேவையான உணவளிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். முன்னதாக கிணற்றில் விழுந்த புள்ளிமானை உயிருடன் மீட்ட தீயணைப்பு, வனத்துறை அதிகாரிகளை கிராமமக்கள் பாராட்டினர்.