வறட்சி பாதித்த பயிர்கள் கணக்கெடுப்பு பணி வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு
திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் வறட்சி பாதித்த பயிர்கள் கணக்கெடுப்பு பணியை வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்துபோனதால் கிராமப்புறங்களில் பயிர் செய்யப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் அளவிலான விவசாய பயிர்கள் தண்ணீரின்றி கருகின. இவ்வாறு வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு சேத விவரங்களை கணக்கெடுக்கும் பணிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர். சிறுவானூர், சிறுமதுரை ஆகிய பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட உளுந்து, நெல் பயிர்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி முழுமையாக நடைபெற்றதா என்பது குறித்தும் பயனாளிகள் விவரம், பாதிக்கப்பட்ட பயிர்களின் பரப்பளவு, வருவாய்த்துறை ஆவணம் உள்ளிட்டவை குறித்தும் நேற்று காலை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் தேவநாதன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பணியை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர் நீலவேணி, வட்டார தொழில் நுட்ப மேலாளர் சங்கீதா, உதவி வேளாண்மை அலுவலர் பாக்கியராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.