ஓமலூர் புறவழிச்சாலையில் மேம்பாலத்தின் சுவர் மீது மோதி நடுரோட்டில் லாரி கவிழ்ந்தது


ஓமலூர் புறவழிச்சாலையில் மேம்பாலத்தின் சுவர் மீது மோதி நடுரோட்டில் லாரி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 16 Feb 2017 4:30 AM IST (Updated: 16 Feb 2017 3:01 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் புறவழிச்சாலையில் மேம்பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதி நடுரோட்டில் டாரஸ் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஓமலூர்,

அரிசி மூட்டைகள்


நாமக்கல்லை சேர்ந்தவர் கோபால், டாரஸ் லாரி உரிமையாளர். இவருடைய டாரஸ் லாரியில் கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியில் இருந்து 640 அரிசிமூட்டைகள் லோடு ஏற்றப்பட்டு திண்டுக்கல் நோக்கி வந்தது. லாரியை நாமக்கல்லை சேர்ந்த டிரைவர் சொக்கலிங்கம் என்பவர் ஓட்டி வந்தார். மற்றொரு டிரைவர் கருணாகரன் என்பவரும் உடன் வந்தார்.

நேற்று அதிகாலை 3 மணியளவில் சேலம் மாவட்டம், ஓமலூர் புறவழிச்சாலையில் மேம்பாலத்தின் மீது லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியின் முன்பக்கத்தின் இருசக்கரங்களும் முறிந்து உடைந்து நொறுங்கியது. இதையடுத்து அந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது. இதனால் அந்த மேம்பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 2 டிரைவர்களும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் வேறு டாரஸ் லாரி வரவழைக்கப்பட்டு, அரிசி மூட்டைகள் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது. பின்னர் கிரேன் மூலம் அந்த லாரியை அப்புறப்படுத்தினர்.

இந்த விபத்து எதிரொலியாக, அந்த மேம்பாலத்தின் வழியாக சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் விபத்து மீட்பு பணி நடந்த போது கனரக வாகனங்கள் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள பாதையில் திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story