திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்


திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 16 Feb 2017 4:30 AM IST (Updated: 16 Feb 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

காய்கறி மூட்டைகளின் எடை அளவை குறைக்க கோரி திருச்சி காந்திமார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி,

சுமை தூக்கும் தொழிலாளர்கள்

திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் லாரி, வேன்களில் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. பெங்களூரு, மைசூரு போன்ற ஊர்களில் இருந்து முட்டைகோஸ், கேரட், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் மூட்டை, மூட்டையாக லாரிகளில் வந்து இறங்குகிறது. இந்த மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் லாரியில் இருந்து இறக்கி வைப்பார்கள். அவர் களுக்கு மூட்டைகளின் எண்ணிக்கை அடிப்படையில் கூலி வழங்கப்படுகிறது.

திடீர் வேலை நிறுத்தம்

இந்தநிலையில் காய்கறி மூட்டைகளின் எடைஅளவு 100 முதல் 140 கிலோ வரை இருப்பதாகவும், இதனால் தொழிலாளர்கள் மூட்டைகளை சுமக்க முடியாமல் சிரமம் அடைந்து வருவதாகவும், ஆகவே வெளிமாநிலங்களில் இருந்து வரும் காய்கறி மூட்டைகளின் எடையின் அளவை 70 கிலோவாக குறைத்து அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி காந்தி மார்க்கெட்டில் இங்கிலீஷ் காய்கறிகள் சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் நேற்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வெளியூரில் இருந்து வந்த காய்கறி மூட்டைகள் லாரிகளில் இருந்து இறக்கப்படாமல் இருந்தன. இதனால் காந்தி மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த காந்திமார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் காய்கறி கடைகளின் உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது “காய்கறி மூட்டைகள் வெளிமாநிலங்களில் இருந்து ஏற்றி அனுப்பப்படுவதால் அந்தந்த ஊர்களுக்கு இது பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தான் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்கு கால அவகாசமும் தேவைப்படும்” என்றார். இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பினர். இந்த சம்பவம் நேற்று காந்தி மார்க்கெட் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story