திருச்சி அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 8 வீரர்கள் காயம்


திருச்சி அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 8 வீரர்கள் காயம்
x
தினத்தந்தி 16 Feb 2017 4:30 AM IST (Updated: 16 Feb 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 8 வீரர்கள் காயம் அடைந்தனர். ஜல்லிக்கட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

கல்லக்குடி,

ஜல்லிக்கட்டு போட்டி

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை நீங்கியதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் எம்.கண்ணனூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்தனர்.

இதற்காக திருச்சி மாவட்ட கலெக்டரிடம் அனுமதி கேட்டனர். இதைத்தொடர்ந்து லால்குடி கோட்டாட்சியர்(பொறுப்பு)மணிவண்ணன், தாசில்தார் ஜவகர்லால் நேரு ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிசாமி எம்.கண்ணனூர் கிராமத்துக்கு வந்தார். அவர் அங்கு ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் 15-ந் தேதி(நேற்று) ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கினார்.

கோவில் காளைகள்

இதைத்தொடர்ந்து எம்.கண்ணனூர் காலனி திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. சரியாக காலை 9.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து 3 கோவில் காளைகள் அங்கு அலங்கரித்து கொண்டு வரப்பட்டன. அந்த காளைகள் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக அழைத்து செல்லப்பட்டு மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு சிறப்பு வழிபாடு நடத்திய பின்னர் அந்த காளைகளை வாடிவாசலுக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் கோவில் காளைகளை ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விட்டனர். இதைத்தொடர்ந்து திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 181 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

8 வீரர்கள் காயம்

காளைகள் வாடிவாசலில் இருந்து துள்ளி குதித்து சென்ற போது அதனை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். பெரும்பாலான காளைகள் இளைஞர்களிடம் சிக்காமல் துள்ளி குதித்து ஓடின. சில காளைகள் மாடுபிடி வீரர்களை கொம்பால் குத்தி பந்தாடியது. சில காளைகள் என்னுடன் மோத வருகிறாயா? என்று கேட்பது போன்று மாடுபிடி வீரர்களை ஓட ஓட விரட்டின.

இந்த போட்டியில் மாடுகள் முட்டியதில் 8 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு சம்பவ இடத்திலேயே முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து 6 பேர் உடனடியாக அங்கிருந்து திரும்பினர். இவர்களில் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததால் ஒரு வீரர் திருச்சி அரசு மருத்துவமனையிலும், மற்றொருவர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பரிசு பொருட்கள்

மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களால் அடக்க முடியாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் உடனடியாக பரிசுகள் வழங்கப்பட்டன. சமையல் குக்கர், சில்வர் குடம், நாற்காலி, வெள்ளி காசுகள் உள்பட ரூ.3 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. பரிசு பொருள் பெறுபவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அங்கு திரண்டிருந்தவர்கள் கரகோஷம் செய்தனர்.

இந்த போட்டியை கண்டு ரசிப்பதற்கு வசதியாக வாடி வாசல் இருபுறமும் சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் அரண் போன்று டிராக்டர் டிரைலரும், லாரிகளும் நிறுத்தப்பட்டு இருந்தன. அவைகளின் மீது ஏறி நின்றும் மேலும் தடுப்புகளின் ஒரு புறம் பெண்களும், மற்றொரு புறம் ஆண்களும் நின்று கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்தனர்.

ஜல்லிக்கட்டு நடந்த எம்.கண்ணனூர் கிராமம் திருச்சி மாவட்டத்தின் எல்லையாக இருந்தாலும் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் எல்லை பகுதியாகவும் உள்ளதால் இந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்த 40 கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர்.

400 போலீசார் பாதுகாப்பு

ஜல்லிக்கட்டு போட்டி தொடக்க நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரி தர்ப்பகராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூடுதல் சூப்பிரண்டு கலையரசன், துணை சூப்பிரண்டுகள் நடராஜன், கணேசன், 15 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 3 மணி அளவில் முடிவடைந்தது. 

Next Story