வாலிபர்களை கத்தியால் தாக்கிய 2 பேர் கைது மேலும் 4 பேருக்கு வலைவீச்சு


வாலிபர்களை கத்தியால் தாக்கிய 2 பேர் கைது மேலும் 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 16 Feb 2017 3:20 AM IST (Updated: 16 Feb 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

மர்மநபர்கள், கார்த்திகேயனை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கத்தியால் அவரது தலையில் தாக்கினர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் வடக்குமாட வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 23). இவர், தனது நண்பரான அதே பகுதி அம்சா தோட்டம் 2-வது தெருவைச் சேர்ந்த ஆகாஷ் (19) என்பவருடன் சின்னமேட்டுப்பாளையம், சென்னியம்மன் கோவில் தெருவில் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக 3 மோட்டார் சைக்கிள்களில் வேகமாக வந்த 6 பேரை, “ஏன் இவ்வாறு வேகமாக செல்கிறீர்கள்?” என கார்த்திகேயன் தட்டிக்கேட்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள், கார்த்திகேயனை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கத்தியால் அவரது தலையில் தாக்கினர். இதை தடுக்க வந்த அவரது நண்பர் ஆகாஷையும் கத்தியால் தாக்கினர். அப்போது அந்த வழியாக ஆட்டோ ஓட்டி வந்த பிரபு (32) என்பவர் மர்மநபர்களை தெருவில் வழிவிட்டு நிற்கும்படி கூறினார். இதனால் ஆட்டோ டிரைவர் பிரபுவையும் கத்தியால் தாக்கிவிட்டு மர்மநபர்கள் தப்பிச் சென்று விட்டனர். இதில் காயம் அடைந்த கார்த்திகேயன், ஆகாஷ், பிரபு ஆகிய 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதி நெல்லிக்காரன் தெருவைச் சேர்ந்த மோகன்ராஜ் (22), மனோஜ் (20) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஜோதி என்ற ஜோதிபாசு, விஜி, ராஜேஷ் உள்பட 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story