வருகிற நிதியாண்டில் புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு இல்லை அதிகாரிகள் தகவல்


வருகிற நிதியாண்டில் புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு இல்லை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 16 Feb 2017 4:00 AM IST (Updated: 16 Feb 2017 3:52 AM IST)
t-max-icont-min-icon

வருகிற நிதியாண்டில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என்று மின்துறை ஆணைய கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டண உயர்வு இல்லை

கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பில் வருவாய் தேவை, உத்தேச மின்கட்டண பட்டியல் தொடர்பான பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மீரஜா மாத்தூர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மின்துறை கண்காணிப்பு பொறியாளர் மதிவாணன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கட்டண உயர்வு இல்லாமல் நடப்பு நிதியாண்டின் கட்டணமே அடுத்த நிதியாண்டிற்கும் தொடர்ந்து வசூலிக்கப் போவதாக ஆணைய கூட்டத்தின்போது அதிகாரிகள் தெரிவித்தனர்.

குற்றச்சாட்டுகள்

இந்த கருத்துகேட்பு கூட்டத்தில் குறைந்த அளவிலேயே பொதுமக்கள் கலந்துகொண்டனர். ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி பேசும்போது, ஆணைய கூட்டத்தில் கலந்துகொள்ளும் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் ஆணைய கூட்டத்துக்கு அவர்கள் யாரும் வருவதில்லை என்று புகார் தெரிவித்தார்.

மாணவர்–பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா பேசும்போது, மின்மிகை மாநிலமான புதுச்சேரியில் கோடைகாலத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்துறையில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்பவேண்டும், மின் இழப்பை தடுக்கவேண்டும், மின் மீட்டர்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதை சரி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பாக்கி வசூல் நடவடிக்கை என்ன?

இந்திய கம்யூனிஸ்டு செயற்குழு உறுப்பினர் முருகன் கூறும்போது, பல கோடி வரிபாக்கி வைத்துள்ள தொழிற்சாலைகளிடம் இருந்து மின்கட்டண பாக்கியை வசூலிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பினார். பொதுமக்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுப்பினர் செயலர் மீரஜா மாத்தூர் தெரிவித்தார்.


Next Story