சாராயம் காய்ச்சுவது பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்த சிவசேனா பிரமுகர், குடும்பத்தினர் மீது சரமாரி தாக்குதல்; வீடு சூறை 45 பேர் கும்பல் வெறிச்செயல்

சாராயம் காய்ச்சுவது பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்த சிவசேனா பிரமுகர், குடும்பத்தினர் மீது சரமாரி தாக்குதல்; வீடு சூறை 45 பேர் கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 16 Feb 2017 4:02 AM IST (Updated: 16 Feb 2017 4:02 AM IST)
t-max-icont-min-icon

சாராயம் காய்ச்சுவது பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்த சிவசேனா பிரமுகரின் வீடு சூறையாடப்பட்டது. மேலும் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர், 45 பேர் கும்பலால் சரமாரியாக தாக்கப்பட்டனர்.

தானே,

சாராயம் காய்ச்சுவது பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்த சிவசேனா பிரமுகரின் வீடு சூறையாடப்பட்டது. மேலும் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர், 45 பேர் கும்பலால் சரமாரியாக தாக்கப்பட்டனர்.

சிவசேனா பிரமுகர்

தானே மாவட்டம் முர்பாத் தாலுகா கோரவாலே கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங் துமால்(வயது48). இவர் சிவசேனா கட்சி பிரமுகராக இருந்து வருகிறார். அதே கிராமத்தை சிலர் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதுபற்றி பாண்டுரங் துமால் அவ்வப்போது போலீசுக்கு தகவல் கொடுத்து வந்தார். அவரது இந்த தகவலின் பேரில் போலீசார் கோரவாலே கிராமத்தில் 10–க்கும் மேற்பட்ட தடவை அதிரடி சோதனை நடத்தி சாராயம் காய்ச்சுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்.

வீடு சூறை

இதன் காரணமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தவர்களின் கோபத்திற்கு பாண்டுரங் துமால் ஆளானார். சம்பவத்தன்று மாலை அந்த கிராமத்தை சேர்ந்த 45 பேர் கும்பல் பாண்டுரங் துமாலின் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும் அவரது வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். இந்த தாக்குதலில் பாண்டுரங் துமால் உள்பட அவரது குடும்பத்தினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 45 பேர் மீது வழக்குப்பதிவு செய்து யோகேஷ் தாக்கரே, தர்‌ஷத் துலாமல் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடிவருகின்றனர்.

Next Story