வீராம்பட்டினம், நல்லவாடு கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய எண்ணெய் படலம்


வீராம்பட்டினம், நல்லவாடு கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய எண்ணெய் படலம்
x
தினத்தந்தி 16 Feb 2017 4:15 AM IST (Updated: 16 Feb 2017 4:14 AM IST)
t-max-icont-min-icon

வீராம்பட்டினம், நல்லவாடு கடற்கரை பகுதியில் எண்ணெய் படலம் கரை ஒதுங்கியது. இந்தநிலையில் கடலில் மீன்கள் கிடைக்கவில்லை என மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.

டீசல் கொட்டியது

சென்னை, எண்ணூர் துறைமுகத்துக்கு அருகே, கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலில் 2 கப்பல்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், ஒரு கப்பலில் இருந்து 29 ஆயிரத்து 141 டன் அளவில் டீசல் கடலில் கொட்டியது. இதனால், கடலில் உள்ள உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆமைகள், மீன்கள் செத்து மிதந்தன.

கடல் நீர் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு நிறம் மாறி காட்சியளித்தது. மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாமல், வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். கடலில் கொட்டிய டீசல் பரவலாக நீளும் அபாயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடலில் இருந்து டீசலை அகற்ற போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.இதனையடுத்து, துறைமுக நிர்வாகம், தீயணைப்பு மற்றும் மாநகராட்சி மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் அந்த எண்ணெய் படலத்தை கடல் நீரில் இருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

எண்ணெய் படலம்

கடலில் கலந்த கச்சா எண்ணெய் கடல் நீரோட்டத்தால், புதுச்சேரி கடற்கரை பகுதிக்கு அடித்து வரப்பட்டுள்ளது.

இந்த எண்ணெய் படலம் புதுச்சேரிக்கும் பரவும் நிலை இருப்பதாக அப்போதே தேசிய மீனவர் பேரவை எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் புதுவை வீராம்பட்டினம், நடுக்குப்பம், நல்லவாடு, நரம்பை, பனித்திட்டு உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் கரை பகுதிகளில் திட்டு திட்டாக எண்ணெய் படலம் திடீரென கரை ஒதுங்கியுள்ளது. சென்னை எண்ணூரில் கொட்டிய எண்ணை படலம் புதுவைக்கும் பரவி இருக்கலாம் என தெரிகிறது. இதைப்பார்த்த பொதுமக்கள், மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடற்கரை பகுதியில் எங்கு பார்த்தாலும், எண்ணெய் கழிவு தென்படுகிறது. குறிப்பாக, வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம், புதுக்குப்பம், நல்லவாடு, பனித்திட்டு, நரம்பை, மூ.புதுக்குப்பம் ஆகிய கடற்கரை பகுதியில் இந்த எண்ணெய் கழிவு கிடக்கிறது.

மீனவர்கள் பேட்டி

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘கடந்த இரண்டு நாட்களாக கடல் நீரில் எண்ணெய் படலமாக இருந்தது. நேற்று அதிகாலை இந்த படலங்கள் கரை ஒதுங்கியது. இதனால், கடற்கரை பகுதியில் நடந்து சென்றால், கச்சா எண்ணெய் படலம் ஒட்டிக்கொள்கிறது. வலைகளிலும், படகிலும் ஒட்டிக்கொண்டு சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி கடலில் மீன்களும் கிடைக்கவில்லை. கடல்நீர் மாசு பட்டிருப்பதால், மீன்கள் வேறு பகுதிக்கு சென்று விட்டன. கடல் சீற்றத்தாலும், மீன்கள் சரியாக கிடைக்காததாலும் 3 நாட்களாக தொழிலுக்கு செல்லாமல் உள்ளோம். ஆமைகளும் அதிகளவில் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன’ என்றனர்.

அதிகாரிகள் ஆய்வு

இந்நிலையில், சுற்றுச்சூழல் துறை இயக்குனர் துவாகரநாத் உத்தரவின் பேரில், சுற்றுச்சூழல் பொறியாளர் டாக்டர் ரமேஷ் தலைமையில் இளநிலை பொறியாளர் பிரபு, ஆய்வுக்கூட அறிவியல் உதவியாளர் தமிழரசன் ஆகியோர் நரம்பை கடற்கரைபகுதியிலும், அறிவியல் விஞ்ஞானி நித்தின், இளநிலை பொறியாளர் காளமேகம், ஆய்வுக்கூட அறிவியல் உதவியாளர் ஆனந்த் ஆகியோர் புதுக்குப்பம் கடற்கரைபகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி இருந்த எண்ணெய் படலங்களை சேகரித்தனர்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் கூறுகையில், ‘இந்த எண்ணெய் படலம், புதுக்குப்பம், நரம்பை உள்ளிட்ட பகுதியில் கரை ஒதுங்கியதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, எண்ணெய் படலம், மற்றும் கடல்நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். ஆய்வின் முடிவை பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்’ என்றார்.


Next Story