எரிபொருட்கள் வினியோகத்தில் முறைகேடு புகார்: பெட்ரோல் பங்க்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
எரிபொருட்கள் வினியோகத்தில் முறைகேடு செய்யப்படுவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டதையொட்டி பெட்ரோல் பங்க்களில் எடை அளவுத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினார்கள்.
புதுவை நகரப் பகுதியில் உள்ள பெட்ரோ பங்க்களில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் அளவு குறைவாக வினியோகம் செய்யப்படுவதாக எடை அளவுத் துறைக்கு அடிக்கடி புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. இதைத்தொடர்ந்து அதிகாரி ஆபேல் ரொசாரியோ உத்தரவின்பேரில் தாசில்தார் குமரன் மற்றும் அதிகாரிகள் நகரப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்களில் சோதனை நடத்தினார்கள்.
பெட்ரோல் பங்க்களில் வினியோகம் செய்யப்படும் பெட்ரோல், டீசலை பெற்று தாங்கள் கொண்டு சென்ற அளவு கருவிகளில் அளந்து பார்த்து ஒப்பீடு செய்தனர். வாகனங்களுக்கு ஆயில் ஊற்ற பயன்படுத்தப்படும் சிறு அளவைகளும் ஆய்வு செய்யப்பட்டன.
திசை திருப்பக்கூடாதுபெட்ரோல் பங்க்களில் பணியாற்றும் ஊழியர்களிடம், பெட்ரோல் டீசல் நிரப்பும் முன்பு அளவு பூஜ்யத்தில் உள்ளதா? என்பதை பார்த்து அதன்பிறகே வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதேபோல் முறைகேடு செய்யும் நோக்கத்துடன் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஊழியர்கள் திசை திருப்பும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது, முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதுபோன்ற சோதனைகள் இனி அடிக்கடி தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனை காரணமாக புதுவை பெட்ரோல் பங்க்களில் பரபரப்பு காணப்பட்டது.