சரியான திட்டமிடுதலும், விடா முயற்சியும் இருந்தால் உயர் பதவிகளை அடையலாம்


சரியான திட்டமிடுதலும், விடா முயற்சியும் இருந்தால் உயர் பதவிகளை அடையலாம்
x
தினத்தந்தி 17 Feb 2017 2:30 AM IST (Updated: 16 Feb 2017 8:36 PM IST)
t-max-icont-min-icon

சரியான திட்டமிடுதலும், விடா முயற்சியும் இருந்தால் உயர் பதவிகளை அடையலாம் என்று மாணவ – மாணவிகளுக்கு கலெக்டர் ராமன் அறிவுரை வழங்கினார்.

வேலூர்,

சரியான திட்டமிடுதலும், விடா முயற்சியும் இருந்தால் உயர் பதவிகளை அடையலாம் என்று மாணவ – மாணவிகளுக்கு கலெக்டர் ராமன் அறிவுரை வழங்கினார்.

வழிகாட்டி நிகழ்ச்சி

காட்பாடி அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ – மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் எஸ்.ஏ.ராமன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்று துடிக்கும் இன்றைய இளைஞர்கள் படித்து முடித்த உடனேயே கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேலைக்கு சென்று அந்த வேலையில் மனநிறைவு இல்லாமல் இருப்பது தற்போதைய காலக்கட்டத்தில் அதிகமாக உள்ளது. அரசு துறையில் உயர் பதவிகளை அடைய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. அதற்கு பொது அறிவு, கடுமையான அர்ப்பணிப்பு, தீராத உழைப்பு, விடாமுயற்சி, சரியான திட்டமிடுதல் போன்ற பண்புகளை கொண்டு தொடர்ந்து அவ்வப்போது அரசுத்துறை தேர்வுகளை எழுத வேண்டும். முதல் முறையாக தேர்வுகளை எழுதிய உடனேயே தனக்கு பதவி கிடைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கடமைக்காக எழுதி அதில் தோல்வி அடைந்துவிட்டால் அடுத்தமுறை முயற்சி செய்வதில்லை.

சரியான திட்டமிடுதல்

இந்த நிலை இளைஞர்களிடையே அதிகமாக இருக்கிறது. ஆனால் விடாமுயற்சியுடன் செயலாற்றும் நபர்கள் வெற்றி பெற்று உயர்பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். போட்டி நிறைந்த இந்த உலகில் உயர்நிலையை அடைய கனவுகளுடன் கடின உழைப்பும், விடா முயற்சியும் கண்டிப்பாக வேண்டும்.

கல்லூரி படிப்பை முடித்தவுடனே வருங்கால இலக்கு என்ன என்பதை சரியான திட்டமிடுதலுடன் மூலம் அடைய அயராது உழைத்து வெற்றிபெற வேண்டும். இளைஞர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற்று சிறந்து விளங்க தற்போது அரசு பல்வேறு பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இந்திய ஆட்சிப்பணி தேர்வு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. மாணவர்கள் உத்வேகத்துடன் படித்து எதிர்காலத்தில் ஒரு சிறந்த அரசு உயர் அதிகாரியாக வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குனர் சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயபிரகாஷ், வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் அருணகிரி, அனைவருக்கும் கல்வி இயக்கம் ஜோதிஸ்வரன் மற்றும் மாணவ– மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story