தாட்கோ திட்டத்தின் மூலம் வேளாண் நிலம் வாங்க ஆதிதிராவிட பெண்கள் விண்ணப்பிக்கலாம்


தாட்கோ திட்டத்தின் மூலம் வேளாண் நிலம் வாங்க ஆதிதிராவிட பெண்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 17 Feb 2017 2:30 AM IST (Updated: 16 Feb 2017 8:45 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த பெண்கள் தாட்கோ திட்டத்தின் மூலம் வேளாண்நிலம் வாங்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த பெண்கள் தாட்கோ திட்டத்தின் மூலம் வேளாண்நிலம் வாங்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

வேளாண் நிலம் வாங்கும் திட்டம்

ஆதிதிராவிட மக்களின் நில உடைமையை அதிகரிக்கும் பொருட்டும், ஆதிதிராவிட பெண்கள் நிலையை உயர்த்தவும் தாட்கோ மூலம் வேளாண் நிலம் வாங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நிலம் வாங்குவதற்கான திட்டத்தொகையில் 30 சதவீதம் மானியமாகவும், அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. அதன்படி 18 வயதுக்கு மேல் 65 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ஆதிதிராவிடர் அல்லாத பிற வகுப்பினர்களிடமிருந்து நிலம் வாங்கி பயன்பெறலாம். இத்திட்டத்தில் நன்செய் நிலமாக இருந்தால் 2½ ஏக்கர் மற்றும் புன்செய் நிலமாக இருந்தால் 5 ஏக்கர் வரை வாங்கலாம். ஏற்கனவே நிலம் வைத்துள்ளவர்களும் இதில் பயன் பெறலாம்.

நில மேம்பாடு திட்டத்தின் கீழ் ஏற்கனவே உள்ள நிலத்தில் நீர்வள ஆதாரத்தை பெருக்கும் பொருட்டு நபார்டு வழிகாட்டுதலின்படி நிலத்தடி நீர் ஆதாரம் உள்ள பகுதிகளில் திறந்தவெளி கிணறு, ஆழ்துளை கிணறு, பம்பு செட் அமைத்தல், சொட்டு நீர் பாசனம் மற்றும் சுழல் முறை நீர்பாசனம் அமைத்தல் போன்றவற்றுக்கும் திட்ட தொகையில் 30 சதவீதம் மானியமாகவும், அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இத் திட்டத்தில் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிலத்தின் சிட்டா, பட்டா

வேளாண்மை நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் தங்களது சாதிசான்று, வருமான சான்று, ரே‌ஷன் அட்டை, வாங்க உத்தேசித்துள்ள நிலத்தின் சிட்டா, பட்டா, அடங்கல், நில வரைபடம், சார் பதிவாளரிடம் பெற்ற நிலத்திற்கான வழிகாட்டு மதிப்பு, கிரைய ஒப்பந்த பத்திரம், வில்லங்க சான்று ஆகியவைகளோடு www.http:application.tahdco.com என்ற தாட்கோ இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு திருவண்ணாமலை முத்துவிநாயகர் கோவில் தெருவில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story