5 மணி நேரம் நடந்த போராட்டம்: 80 அடி ஆழ கிணற்றில் தத்தளித்த வாலிபர்; ‘கிரேன்’ உதவியுடன் மீட்பு


5 மணி நேரம் நடந்த போராட்டம்: 80 அடி ஆழ கிணற்றில் தத்தளித்த வாலிபர்; ‘கிரேன்’ உதவியுடன் மீட்பு
x
தினத்தந்தி 17 Feb 2017 3:00 AM IST (Updated: 17 Feb 2017 12:02 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் குதித்து தத்தளித்த வாலிபர் சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பின்பு மீட்கப்பட்டார்.

ஆலங்குளம்,

கிணற்றில் குதித்து தத்தளித்த வாலிபர் சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பின்பு மீட்கப்பட்டார். கிணற்றில் இறங்கிய தீயணைப்பு படையினரை அவர் தாக்கியதால் ‘கிரேன் எந்திரம் உதவியுடன் மீட்கப்பட்டார்.

கிணற்றில் தத்தளிப்பு

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதப்புரம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 31). துணி தைக்கும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் வீட்டைவிட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இந்த நிலையில் நேற்று காலையில் ஆலங்குளம்–துத்திகுளம் சாலை பகுதியில் உள்ள 80 அடி ஆழம் கொண்ட கிணற்றில் அண்ணமாலை குதித்து தத்தளித்தார். இதனை அந்த வழியாக வந்த ஒருவர் கவனித்து, ஆலங்குளம் தீயணைப்பு படையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

தாக்குதல்

உடனடியாக தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி அண்ணாமலையை மீட்க முயற்சித்தனர். அப்போது, அவர் தீயணைப்பு படை வீரர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுரண்டை தீயணைப்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் கிணற்றில் இறங்கி அண்ணாமலையை மீட்க முயற்சித்தனர். 80 அடி ஆழ கிணறு என்றாலும், அதில் 15 அடி அளவுக்கே தண்ணீர் இருந்தது. அதிக ஆழம் என்பதால் மீட்டு கரைக்கு கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. போலீசாரும், தீயணைப்பு படையினரும் அண்ணாமலையை சமாதானம் செய்ய முயற்சித்தும், அவர் கேட்கவில்லை.

கிரேன் உதவியுடன் மீட்பு

இதையடுத்து ‘கிரேன்‘ எந்திரம் கொண்டு வரப்பட்டு, அதில் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி அதன் மூலம் அண்ணாமலையின் உறவினர்கள் சிலரை கிணற்றுக்குள் இறக்கினர். அவர்கள் அண்ணாமலையை சமாதானப்படுத்தினர். அதன்பின்பு அவரை கிரேன் எந்திரத்தில் ஏற்றி தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் மேலே தூக்கி கரை சேர்த்தனர். கிட்டத்தட்ட 5 மணி நேர போராட்டத்துக்கு பின்பு அண்ணாமலை மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் விசாரணையில், அண்ணாமலைக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர். எனவே அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story