அஜ்ஜாம்புராவில் உள்ள அம்ருத மகால் கோசாலையில் மந்திரி ஏ.மஞ்சு திடீர் ஆய்வு
அஜ்ஜாம்புராவில் உள்ள அம்ருத மகால் கோசாலையில் மந்திரி ஏ.மஞ்சு திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக அதிகாரிகளை அவர் கடுமையாக சாடினார்.
சிக்கமகளூரு,
அஜ்ஜாம்புராவில் உள்ள அம்ருத மகால் கோசாலையில் மந்திரி ஏ.மஞ்சு திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக அதிகாரிகளை அவர் கடுமையாக சாடினார்.
அம்ருத மகால் கோசாலைசிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா அஜ்ஜாம்புரா பகுதியில் அரசுக்கு சொந்தமான அம்ருத மகால் கோசாலை உள்ளது. இந்த கோசாலையில் இறைச்சிக்காக கடத்தப்படும் மாடுகள், விவசாயிகளால் வளர்க்க முடியாத மாடுகள் உள்பட 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்த கோசாலையில் உள்ள மாடுகளின் பால் தான் முன்பு மைசூரு மன்னருக்கு அனுப்பப்பட்டு வந்தன. இந்த நிலையில் மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வறட்சியால், தற்போது கோசாலையில் வளர்க்கப்பட்டு வரும் மாடுகள் மேய்ச்சல் நிலம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றன. மேலும் சரியான பராமரிப்பின்றியும் கடந்த மாதம் கோசாலையில் வளர்க்கப்பட்டு வந்த 15 பசுமாடுகள் இறந்தன.
மந்திரி ஆய்வுஇந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த கோசாலைக்கு கர்நாடக மாநில கால்நடைத்துறை மந்திரி ஏ.மஞ்சு, சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் சத்தியவதி ஆகியோர் திடீரென சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு வளர்க்கப்படும் பசு மாடுகளையும் மந்திரி பார்வையிட்டார். மேலும் அம்ருத மகாலை சுற்றியுள்ள பாழடைந்த கட்டிடங்களையும் அவர் பார்த்தார்.
இதையடுத்து 15 மாடுகள் இறந்தது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது அதிகாரிகள் தற்போது வறட்சி நிலவி வருவதால் மாடுகளுக்கு உணவு கிடைக்காமலும், தண்ணீர் வசதி இன்றியும் இறந்ததாக தெரிவித்தனர்.
கடும் சாடல்இதைக் கேட்டு கோபம் அடைந்த ஏ.மஞ்சு, அம்ருத மகால் கோசாலையில் உள்ள கால்நடைகளுக்கு உணவு வழங்குவதற்காக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.2 கோடி வரை மாநில அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அந்த பணத்தை என்ன செய்தீர்கள், நீங்கள் பணியில் அலட்சியமாக செயல்பட்டு விட்டு வறட்சி நிலவுவதால் உணவு இல்லை என்றும் அதனால் மாடுகள் இறந்ததாகவும் குறைகூறி வருகிறீர்கள் என்று அதிகாரிகளை கடுமையாக சாடினார்.
அப்போது அதிகாரிகள் ஏதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டு இருந்தனர். இதையடுத்து மந்திரி ஏ.மஞ்சு கூறுகையில், இனிமேலும் இந்த கோசாலையில் மாடுகள் இறந்தால், பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து அவர் கார் மூலம் புறப்பட்டு சென்றார்.