புதியதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்பின் 7–வது மாடியில் அழுகிய நிலையில் 2 ஆண் பிணங்கள் மீட்பு


புதியதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்பின் 7–வது மாடியில் அழுகிய நிலையில் 2 ஆண் பிணங்கள் மீட்பு
x
தினத்தந்தி 17 Feb 2017 1:06 AM IST (Updated: 17 Feb 2017 1:06 AM IST)
t-max-icont-min-icon

மங்களூருவில் புதியதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்பின் 7–வது மாடியில் அழுகிய நிலையில் 2 ஆண் பிணங்கள் கிடந்தன.

மங்களூரு,

மங்களூருவில் புதியதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்பின் 7–வது மாடியில் அழுகிய நிலையில் 2 ஆண் பிணங்கள் கிடந்தன. அதனை மீட்ட போலீசார், யார் அவர்கள்? என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.

2 ஆண் பிணங்கள்

தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் பம்புவெல் பகுதியில் புதியதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பின் 7–வது மாடியில் 2 ஆண் பிணங்கள் அழுகிய நிலையில் கிடந்தன. இதனை நேற்று முன்தினம் மாலை கட்டிடப் பணியில் ஈடுபட்டு இருந்த சில தொழிலாளர்கள் பார்த்து, கத்ரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் 2 பேரின் உடல்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுபற்றி போலீசார் கூறுகையில், பிணமாக கிடந்த 2 பேருக்கும், 30 முதல் 35 வயது இருக்கும். 2 பேரும் இறந்து 3 அல்லது 4 நாட்கள் ஆகி இருக்கும். அதனால் உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.

யார் அவர்கள்?

அதைதொடர்ந்து 2 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மங்களூரு வென்லாக் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் பிணமாக கிடந்தவர்கள் யார்?, அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது தெரியவில்லை. மேலும் அவர்களை யாராவது கொலை செய்தார்களா? அல்லது 2 பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா? என்பதும் தெரியவில்லை.

இதுதொடர்பாக கத்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story